தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உடனடியாக அகற்ற வேண்டும் – சிறிதரன் வலியுறுத்தல்

மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது இனவாதக் கருத்தல்ல என சுட்டிக்காட்டியுள்ள அவர், சட்டம் சமனானது எனக் கூறும் இன்றைய அரசு தனது நிலைப்பட்டில் இருந்து படிப்படியாக மாறி தனது சுய நிலைக்கு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தையிட்டி விகாரை விவகாரம் இன்று தமிழ் மக்களின் இருப்புக்கு சவாலாக மாறியுள்ளது. மக்களின் காணி அவர்களுக்கே உரியது. ஆனால் இன்று அது மறுக்கப்படுவதாக தெரிகின்றது.

நீண்டகாலமாக இரணுவத்தினரது பிடிக்குள் இருந்த எமது மக்களின் காணிகளில் அவர்களுக்கு தெரியாமலேயே இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசினதும் பௌத்த கட்டமைப்பினதும் இந்த அதிகார இறுமாப்பு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றல்ல.

அதனால் குறித்த காணி நிலங்களின் உரிமையாளர்கள் தமக்கான நியாயம் கேட்டு நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.

ஆனாலும் அது இதுவரை நிறைவேறாத நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல முரணான கருத்துக்கள் கூறப்பட்டு திசை திருப்பும் முயற்சியொன்று உருவாக்கப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பும் காட்டப்பட்டது.

அதேநேரம் இலங்கையின் வேறு சில பகுதிகளில் இந்துக் கோயில்கள் சில இன முரண்பாட்டை உருவாக்கும் என்ற தோரணையில் இடிக்கப்பட்டும் இருக்கின்றது.

அதனால் நாட்டில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் ஒரே சட்டம் என்று கூறும் இந்த அரசு, இந்த விகாரையையும் இன முரண்பாட்டை உருவாக்கும் ஒன்றாக கருதி இடிக்கப்படுவது அவசியம்.

அத்தோடு விகாரையின் சுற்றுப்புறத்திலுள்ள வேறு சில மக்களின் காணி நிலங்களும் சட்டவிரோதமாக பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பகுதி மக்கள் எதிர்வரும் 12 ஆம் திகதியன்று பெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க பல்சார் தரப்பினரிடமும் ஆதரவை கோரியுள்ளனர்.

அந்த வகையில் மக்களின் உணர்வுகளுக்கு வலுச்சேர்க்க குறித்த போராட்டத்திற்கு எமது ஆதரவை நாம் வழங்கவுள்ளோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.