லசந்த கொலை வழக்கு விசாரணை: சட்டமா அதிபர் CIDக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தயார்.

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தயாராக இருப்பதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் சாரதியை கடத்திச் சென்று சாட்சியங்களை அழித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க சட்டமா அதிபர் திணைக்களம் பரிந்துரைத்ததற்கு கடும் பொதுமக்கள் விமர்சனம் எழுந்ததை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களம் இந்த முடிவை எடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவுக்கும் , ஜனாதிபதி அநுர திசாநாயக்கவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று சட்டமா அதிபர் , ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தின் மற்ற மூத்த பிரமுகர்களுக்கும் தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை ஏற்க அரசாங்கம் தயாராக இல்லை என்றால், அவரது பரிந்துரைக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என்று சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க அரசாங்கத்திற்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இருப்பினும், எதிர்காலத்தில் புதிய உண்மைகள் வெளிவந்தால், விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக மீண்டும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடியும் என்று சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கொலைக்கு நேரில் கண்ட சாட்சி இல்லை என்றும், 2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தன்னை கடத்தியதாக கொலை நடந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2015 இல் அவர் CID புலனாய்வாளர்களுக்கு புதிய வாக்குமூலம் அளித்ததாகவும் கூறி வெள்ளிக்கிழமை சட்டமா அதிபர் திணைக்களம் ஊடக அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு கல்கீசை நீதவான் நீதிமன்றத்தில் உண்மைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பிரேம் ஆனந்த உடலாகம என அடையாளம் காணப்பட்ட ஒருவர் வழக்கில் சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், முக்கியமாக அடையாளங்காணல் நடவடிக்கையில் உள்ள சட்டரீதியான குறைபாடுகள் காரணமாக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு சாட்சிகள் இல்லாததால் அவரை விடுவிக்க பரிந்துரைத்ததாக , சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், லசந்த விக்ரமதுங்கவின் வாகனத்தில் இருந்து காணாமல் போன ஆவணம் தொடர்பாக CID விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட திஸ்ஸசிரி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகியோரும் சாட்சிகள் இல்லாததால் அவர்களையும் விடுவிக்க பரிந்துரைத்ததாக , அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.