நேற்று நடந்த மின்தடையைப் பற்றிய பொறியாளர் சங்கத்தின் விளக்கம்
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/power-cut.jpg)
நேற்று காலை 11.15 மணியளவில் நாட்டின் முழு மின்விநியோகத்திற்கும் ஏற்பட்ட தடையின் முக்கிய காரணமாக, ஞாயிற்றுக்கிழமை பகலில் மின்தேவையின் குறைவுடன், பெரும் சதவீதத்தில் குறைந்த ஸ்திரத்தன்மை கொண்ட சூரிய மின் உற்பத்தி உள்ளடங்குவதாக இலங்கை மின்சார சபையின் பொறியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையை உறுதி செய்ய முறையான விசாரணை அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாணந்துறை உப மின் கட்டமைப்பில் 33 kV (33 kV Bus Bar) அருகே ஏற்பட்ட திடீர் மின் தடையுடன் குறைந்த மின்சார தேவை மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக நிலையற்றதாக இருந்த தேசிய மின்சார அமைப்பு சமநிலையற்றதாக மாறியது. தானியங்கி அவசரகால செயலிழப்பு முகாமைத்துவ செயன்முறையால் அமைப்பை மீட்டெடுக்க முடியவில்லை. இதன் விளைவாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
இதேபோன்ற சூழ்நிலை பலமுறை ஏற்பட்டிருந்தாலும், மின்சார சபையின் கட்டுப்பாட்டு பிரிவு அதை சமாளித்தது. ஆனால், இன்று அமைப்பின் மோசமான நிலை காரணமாக, மின்விநியோக தடையை தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவானதாக சந்தேகிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, மின்சேமிப்பு பேட்டரி வசதிகள் (Battery Storage) மற்றும் நீர் உந்துதல் மின் நிலையங்கள் (Pump Storage) தொடர்பான திட்டங்களை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சு சேர்ந்து விரைவுபடுத்தி வருகின்றன.
மேலும், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்ப சிலர் முயற்சிக்கின்றனர் என்பதும் பொறியாளர் சங்கத்தால் கவனிக்கப்பட்டுள்ளது.