திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில் 4 போ் கைது!

ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில் சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு 4 பேரை கைது செய்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆந்திரத்தில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பேசிய முதல்வா் சந்திரபாபு நாயுடு, முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி ‘லட்டு’ தயாரிப்புக்கு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டை எழுப்பினாா்.
நாடு முழுவதும் பக்தா்களிடையே அதிா்வலையை ஏற்படுத்திய இவ்விவகாரம் குறித்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இக்குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ இயக்குநரின் மேற்பாா்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, சிபிஐ மற்றும் ஆந்திர காவல் துறையைச் சோ்ந்த தலா 2 அதிகாரிகள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணைய (எஃப்எஸ்எஸ்ஏஐ) அதிகாரி ஒருவா் என 5 போ் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வழங்கிய தனியாா் பால் நிறுவனங்களுக்குத் தொடா்புடைய விபின் ஜெயின், பொமில் ஜெயின், அபூா்வா சாவ்டா, ராஜசேகரன் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இவா்கள் நால்வரும் மூன்று வெவ்வேறு பால்பொருள் நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா். தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கும் ஒப்பந்தப்புள்ளியைப் பெற தமிழகத்தைச் சோ்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தியதும், நெய் கொள்முதலுக்கு வேறொரு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.