அதிகபட்ச நஷ்டஈடு 25 லட்சம் ரூபாய்: எம்.பிக்களுக்கு கோடிக்கணக்கில் வழங்கியது எப்படி ?
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250211-WA0015-1.jpg)
2022 அமைதியின்மையின் போது தீக்கிரையான வீடுகளுக்கு தீ காப்பீட்டால் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், 43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கலாநிதி பிரதிப மஹாநாமஹேவா கோரிக்கை விடுத்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு இடர் முகாமைத்துவச் சட்டத்தால் நிர்வகிக்கப்படும் இலங்கையின் இடர் நிவாரணக் கொள்கையின்படி, முழுமையாக அழிக்கப்பட்ட வீடுகளுக்கான நஷ்டஈட்டுத் தொகை 2.5 மில்லியன் ரூபாய்கள் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டது குறித்து கலாநிதி மஹாநாமஹேவா கவலை தெரிவிப்பதுடன், இந்த கொடுப்பனவுகளுக்கான சட்டரீதியான அடிப்படை என்ன என்றும் கேள்வி எழுப்புகிறார்.
கலாநிதி மஹாநாமஹேவாவின் கூற்றுப்படி, நஷ்டஈட்டுத் தொகை அப்போதைய அரச நிர்வாக அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“சில எம்.பிக்கள் நஷ்டஈடு கோரவில்லை என்றாலும் அவர்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. அது எப்படி நடந்தது? யார் இவற்றை அங்கீகரித்தது?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
இந்த குழு பயன்படுத்திய அளவுகோல்களை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கிறார்.
பாதிக்கப்பட்ட எம்.பிக்கள் ஏற்கனவே தங்களது சேதமடைந்த சொத்துக்களுக்கான காப்பீட்டுப் பணத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் வெளிப்படுத்துகிறார்.
அரசாங்கம் மேலதிக நிதியை கருவூலத்தில் இருந்து மீட்டெடுக்கும் செயல்முறையைத் தொடங்க வேண்டும் என்றும் கலாநிதி மஹாநாமஹேவா பரிந்துரைக்கிறார்.