யோஷித – டேசி பாட்டி இருவருக்கும் ஒரே நேரத்தில் பணமோசடி வழக்கு : டேசி பாட்டிக்கு விமான பயணத் தடை!
2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, யோஷித ராஜபக்ஷவுக்கு பணம் கிடைத்த விதம் குறித்து நியாயமான விளக்கம் அளிக்க முடியாததால், அவர் மீது பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்கு தொடர பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
மேலும், அவரது ஒவ்வொரு பரிவர்த்தனைக்குப் பின்னாலும் இருந்த டேசி ஃபாரஸ் என்ற பிரபல டேசி பாட்டியும் (மகிந்தவின் மாமியார்) சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டு, அவருக்கு எதிராக வழக்குத் தொடரவும், விமானப் பயணத் தடையைப் பெறவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனத்துங்க கூறியதாவது:
“2016 ஆம் ஆண்டு முதல் யோஷித ராஜபக்ஷ என்ற நபருக்கு எதிராக நாங்கள் விசாரணை நடத்தினோம். அதாவது அவரது கணக்குகளில் இருந்த 59 மில்லியனுக்கும் அதிகமான ரூபாய் தொடர்பாக… அவர் அந்தப் பணத்தை எவ்வாறு சம்பாதித்தார் என்பது குறித்து நியாயமான விளக்கம் அளிக்க முடியவில்லை.
அதன்படி, பணமோசடி சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். மேலும், விசாரணையில், இந்தப் பணம் நிரந்தர வைப்பு மற்றும் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டபோது, டேசி ஃபாரஸ் என்ற பெண்மணியுடன் கூட்டு கணக்காகத்தான் இந்தக் கணக்குகள் பராமரிக்கப்பட்டன என்பது தெரியவந்தது.
அதனால், டேசி ஃபாரஸ் என்ற பெண்ணையும் இந்த விசாரணையின் சந்தேக நபராகக் குறிப்பிட வேண்டும் என்று சட்டமா அதிபர் அறிவுரை வழங்கினார்.
அதன்படி, இன்று (11) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ஷ என்ற சந்தேக நபருடன், டேசி ஃபாரஸ் என்ற பெண்ணும் சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டு, இந்த பணமோசடி வழக்கு தொடர்ந்து நடத்தப்படும். அதன்படி, இந்தப் பெண்மணி தொடர்பாகவும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு இணங்க தேவையான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் மேற்கொள்ளும்.
தற்போது இவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வழக்குத் தொடரப்படும்போது, இந்த பணமோசடியில் ஈடுபட்ட அனைத்து சந்தேக நபர்களுக்கும் எதிராக இலங்கை பொலிஸ் வழக்கை தொடர்வர்.