பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கப்பட்டதான தீர்ப்பு வெளியானது!
விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை கடந்த ஆண்டு நீட்டித்த பிரிட்டன் உள்துறையின் நடவடிக்கை தவறானது என்று தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக பிரிட்டன் உள்துறைச் செயலாளருக்கு எதிராக ஆறுமுகம் உள்ளிட்ட மனுதாரர்கள் மேல்முறையீட்டு ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதை கடந்த ஜூலை விசாரித்த நீதிபதிகள் எலிசபெத் லெய்ங், ரிச்சர் விட்டாம், ஃபிலிப் நெல்சன் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பை அளித்துள்ளது.
அதில் “விடுதலைப்புலிகள் மீதான தடை உத்தரவை நீட்டிக்க, உள்துறை கவனத்தில் கொண்ட ஆதாரங்களும் காரணங்களும் போதுமானதாக இல்லை. பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடாத போதிலும், அமைதி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை உள்துறை கவனத்தில் கொள்ளவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், விடுதலைப்புலிகள் இயக்கம், 1991ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொல்ல காரணமாக இருந்தது, 1993இல் இலங்கை பிரதமர் ரணசிங்கே பிரேமதாஸாவை கொல்ல காரணமாக இருந்தது. பல தாக்குதல்களுக்கு தற்கொலை குண்டுதாரிகளை பயன்படுத்தியது என 1976ல் வேலுப்பிள்ளை பிரபாகரனால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம், அவர் 2009இல் சாகும்வரை இலங்கையில் உள்நாட்டுப் போரை மிகத் தீவிரமாக செயல்பட்டது. குடிமக்கள், கட்டமைப்புகள், இலங்கை அரசு மட்டுமின்றி நாடு கடந்தும் அதன் செயல்பாடுகள் இருந்துள்ளதாக அரசு தரப்பில் விசாரணையின்போது சுட்டிக்காட்டப்பட்டது.
019ஆம் ஆண்டு, செப்டம்பர் 25ஆம் தேதி உள்துறையின் தீவிரவாத எதிர்ப்புப்பிரிவின் தலைமை அதிகாரியாக டூகுட் என்ற அதிகாரி இதற்கான சாட்சியத்தை அளித்திருந்தார். அதில் தரை, வான் வழி, கடல் வழியாக படைகளை நிறுவியிருந்ததாகவும் அதன் சர்வதேச தொடர்புகள் மிகவும் நெருக்கமாகவே இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ராணுவ ரீதியில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோல்வியுற்றிருந்தாலும், அந்த இயக்கம் கலைக்கப்பட்டதற்கான அறிவிப்பை விடுதலைப்புலிகள் ஒருபோதும் வெளியிடவில்லை என்றும் டூகுட் கூறியிருந்தார்.
இத்தகைய சூழலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்க முந்தைய காலகட்டத்திலும் கடைசியாக 2014ஆம் ஆண்டிலும் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும், அந்த மனுக்கள் உள்துறையால் நிராகரிக்கப்பட்டன.
இதன் பிறகும் 2018ஆம் ஆண்டு, நவம்பர் 27ஆம் தேதி மேலும் 10 பேர் பிரிட்டன் உள்துறையிடம் அதே கோரிக்கையுடன் விண்ணப்பித்தனர். அதன் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, தீவிரவாத பகுப்பாய்வு அமைப்பு, விடுதலைப்புலிகள் தொடர்பான அச்சுறுத்தலை மதிப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தப்பின்னணியில் பிரிட்டன் உளவுத்துறை அளித்த அறிக்கை அடிப்படையில், பிரிட்டனில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கும் முன்பாக, அந்த இயக்கத்துடன் தொடர்பில் இருந்த, அதன் ஆதரவாளர்களாக இருந்தவர்களின் செயல்பாடுகள் உலக நாடுகளிலும் இருப்பதால் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றும் இதில் எடுக்கப்படும் உறவுகள் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் உள்துறை சார்பில் மதிப்பீடு செய்யப்பட்டது.
2014இல் வடக்கு இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்ட மூன்று பேர் (ஒரு காவலரை சுட்டதாக கூறப்படும் சம்பவத்தில்) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் 75 சயனைடு குப்பிகள், 300 கிராம் சயனைடு பவுடர் ஆகியவற்றுடன் பிடிபட்டது, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், தற்கொலை குண்டுதாரி கவசம், நான்கு கண்ணிவெடிகள், 9 எம்எம் துப்பாக்கி, இரண்டு தோட்டா பெட்டிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது, 2017ஆம் ஆண்டில் தமிழ் எம்.பி ஒருவரை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மூலம் கொல்ல வெளிநாட்டில் உள்ள இயக்கத்தின் ஆதரவாளர்கள் பணியமர்த்தியது, அதே ஆண்டு ஜூலை மாதம், உயர் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாவலரை முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் கொலை செய்தது, அதே ஆண்டு பொது அமைதியை பாதிக்கும் வகையிலான துண்டு பிரசுரங்கள் இலங்கையில் விநியோகிக்கப்பட்டது போன்ற செயல்பாடுகள், விடுதலைப்புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் பல வடிவங்களில் இருப்பதை அனுமானிக்க முடிவதாக அரசு தரப்பு ஆணையம் முன்பு சாட்சியம் அளித்தது.
ஆனாலும், இவை அனைத்தும் இலங்கையில் அந்நாட்டுக்குள் நடந்த விஷயம் என்றும் அவை உண்மையிலேயே விடுதலைப்புலிகள் பின்னணியிலேயே நடந்ததா என்பதற்கான விசாரணை அங்கு நடந்து வரும் நிலையில், அவற்றைக் கொண்டு பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க அரசு உத்தரவிடுவது சரியல்ல என்றும் மனுதாரர்கள் சார்பில் ஆணையத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தனக்கான அதிகாரத்தை உள்துறைச் செயலாளர் எடுத்த விதம் சரியல்ல என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப்புலிகள்தான் ஈடுபட்டதாக ஆரம்பகால சமூக ஊடக தகவல்களில் வலம் வந்த விவரங்கள், வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிந்தைய விசாரணையில், அந்த தாக்குதலில் ஈடுபட்டது வேறு ஒரு இயக்கம் என இலங்கை அரசு தரப்பு அதன் நீதிமன்றத்தில் கூறியது.
இது குறித்து தனது தீர்ப்பில் குறிப்பிட்ட பிரிட்டன் ஆணையம், “இந்த விவகாரத்தில் ஊடகங்களில் வந்த செய்திகள் அடிப்படையில் உள்துறைச் செயலாளர் அவசரப்பட்டு முடிவு எடுக்க தன்னை அனுமதித்துக் கொண்டதாகவே கருதுகிறது” என்று தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டிக்க எடுத்த காரணங்கள், 2018ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் மீது எடுத்த தமது முந்தை முடிவு எந்த அளவுக்கு தாக்கத்தை கொண்டிருக்கும், இதுபோன்ற விவகாரத்தில் உள்துறை செயலாளர் மட்டுமே முடிவெடுப்பது போதுமானதா? ஆகிய கேள்விகள் எழுவதாக ஆணையம் கூறியுள்ளது.
அதைத்தொடர்ந்து உள்துறை சார்பில் முன்வைக்கப்பட்ட விளக்கங்கள் அடிப்படையில், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க செயலாளர் பிறப்பித்த உத்தரவும் அது தொடர்பான முடிவும் எந்த அடிப்படையில் எடுக்கப்படுகிறது என்ற கருத்தை மட்டுமே ஆணையத்தால் வெளியிட முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அந்த அடிப்படையில், உள்துறைச் செயலாளரின் முடிவு தவறானது. அதே சமயம், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பளிக்கப்படுகிறது என்றும் தீர்ப்பில் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து இலங்கை வம்சாவளி லண்டன் வாழ் இலங்கை தமிழரான வழக்கறிஞர் அருண் கனநாதன் பிபிசியிடம் பேசும்போது, “நான் இந்த வழக்கில் நேரடி சட்டத்தரணி கிடையாது. ஆனாலும், வழக்கின் விசாரணை பற்றி அறிந்தவன் என்ற வகையில், “விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடையை நீட்டிக்க அரசு கவனத்தில் கொண்ட ஆதாரங்களில் சிக்கல்கள் உள்ளன. அந்த ஆதாரங்களை பகுப்பாய்வு செய்த விதத்தில் தவறு என்பதால், அந்த முடிவு சட்டத்துக்கு புறம்பானது” என்று ஆணையம் தெரிவித்துள்ளது” என்று தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு பிரிட்டன் உள்துறை செயலாளர் 2001ஆம் ஆண்டில் தடை விதித்தார். அந்த தடை உத்தரவு அவ்வப்போது காலாவதியாகும்போது, மதிப்பாய்வுக்குழு தரும் அறிக்கை அடிப்படையில் அந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2011இல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பு சார்பில் உள்துறைச் செயலாளரின் முந்தைய உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், விடுலைப்புலிகள் என்ற அமைப்பு ஒரு ராணுவ கட்டமைப்பாக இலங்கையில் இயங்கவில்லை. எவ்வித பயங்கரவாத செயல்களும் அங்கு நடக்கவில்லை என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதை கடந்த ஆண்டு கவனத்தில் கொண்ட உள்துறை செயலாளராக இருந்த சஜித் ஜாவேத், இலங்கையில் 2009ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகும் அங்கு நடந்த பல்வேறு சம்பவங்களில் அந்த இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாலும் அவர்களின் ஆதரவாளர்கள் உலக அளவில் இருப்பதாலும், அந்த இயக்கத்துக்கு தடையை நீட்டிப்பதாக உத்தரவிட்டார்.
இது குறித்து வழக்கறிஞர் அருண் கனநாதன் கூறும்போது, “தற்போதைய ஆணையத்தின் தீர்ப்பு அடிப்படையில், இரண்டு உத்தரவுகள் இனி பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒன்று, உள்துறை செயலாளர் எடுத்த முடிவு பிழை என்றபடியால், அதை மீளாய்வு செய்ய உத்தரவிடலாம் அல்லது பிரிட்டன் அரசே விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க உத்தரவிடலாம். இது தொடர்பான தங்களின் நிலையை 28 நாட்களுக்குள் ஆணையத்திடம் மனு தாரர்களும் அரசு தரப்பும் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.
ஆனால், “விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை தாங்களாகவே பிரிட்டன் அரசு நீக்குவதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை. அது அரசியல் சூழ்நிலை, இலங்கையுடனான உறவு, அரசியல் சர்வதேச அழுத்தம் ஆகியவை அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்” என்று வழக்கறிஞர் அருண் கனநாதன் தெரிவித்தார்.
இந்த வழக்கில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கரோலைன் ராபின்சன் பிபிசி தமிழிடம் கூறும்போது, “ஆணையத்தின் தீர்ப்பு தொடர்பாக அரசு தரப்பு, மனுதாரர் தரப்பு, ஆணையம் வழக்கு விசாரணைக்காக நியமித்த சிறப்பு வழக்கறிஞர் ஆகியோரின் கருத்துகள், எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கு அனுமதிக்கப்பட்ட அவகாசமான 28 நாட்களுக்குள் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், அதன் அடிப்படையில் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இறுதி உத்தரவை பிறப்பிக்கும். ஆனால், அந்த உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என்பதை குறிப்பிட முடியாது,” என்று தெரிவித்தார்.
இலங்கை தலைவர்கள் வரவேற்பு
பிரிட்டன் ஆணையத்தின் தீர்ப்பானது, ஈழத் தமிழர்களுக்கு காலம் கடந்தேனும் நீதி கிடைத்துள்ளதாக முன்னாள் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இந்த தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.
மற்ற நாடுகளில் என்ன நிலை?
இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய உள்துறை அமைச்சகம் பிறப்பிக்கும் அறிவிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டெல்லி உயர் நீதிமன்ற சிறப்புத் தீர்ப்பாயம் உள்ளது. கடைசியாக இந்திய உள்துறை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து 2019ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது.
அமெரிக்காவிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை “தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம்” ஆக அந்நாட்டு அரசு 1997ஆம் ஆண்டு பட்டியலிட்டது. உலக அளவில் தற்போது இந்தியா, பிரிட்டன் உட்பட 32 நாடுகள், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதித்துள்ளது.
- BBC tamil
[pdf-embedder url=”http://ceylonmirror.net/wp-content/uploads/2020/10/POAC-OPEN-Judgment-21.10.2020.pdf” title=”POAC – OPEN Judgment – 21.10.2020″]