சென்னை வடபழனி ஆண்டவர் ஆலயத் தைப்பூசத் திருவிழா
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250212-WA0009.jpg)
தமிழகத் தலைநகர் சென்னையில் உள்ள அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் 120 ஆண்டுகளுக்கும் மேல் பழமையும் வரலாறும் நிறைந்த கோயிலாகும்.
இன்று அங்கு தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதைக் காண முடிந்தது. பக்தர்கள் பலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரை மேற்கொண்டும் தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.
கோயிலைச் சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது சிரமமாகவே காணப்படுகிறது.
குழந்தைகள் முதல் முதியோர் வரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பல மணிநேரம் வரிசையில் காத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
சிலர் கூட்ட நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்க அதிகாலை மூன்று மணிக்கே கோயிலுக்கு வந்துவிட்டதாக கூறினர். பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தது மனநிறைவை அளித்ததாக அவர்கள் கூறினர்.