20 மீதான 2 நாள் விவாதம் ஆரம்பம்; எதிராக எதிர்க்கட்சி வாகனப் பேரணி.

20 மீதான 2 நாள் விவாதம் ஆரம்பம்;
எதிராக எதிர்க்கட்சி வாகனப் பேரணி

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைபு தொடர்பான இரு நாள் விவாதம் இன்று காலை 10 மணியளவில் நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.

அரசு சார்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி விவாதத்தை ஆரம்பித்தார்.

20ஆவது திருத்தம் தொடர்பில் குழுநிலையின்போது சேர்க்க எதிர்பார்க்கும் திருத்தங்களை இன்று மாலை 6 மணிக்கு முன்னர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்குமாறு, குறித்த விவாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இன்றைய சபை அமர்வுகளுக்கு முன்னதாக, 20ஆவது திருத்த வரைபுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தை நோக்கி வாகனப் பேரணியொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கைகளில் ’20 வேண்டாம்’ எனத் தெரிவிக்கும் வாசகத்துடனான பட்டி அணிந்து, 20ஆவது திருத்தத்தை எதிர்க்கும் வாசகத்துடனான முகக்கவசங்களையும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களது வாகனங்களிலும் 20ஆவது திருத்தத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தத்தின் 3, 5, 14, 22 ஆகிய பிரிவுகள், சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பொதுமக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும், அதிலுள்ள 3,14 ஆகிய பிரிவுகளை குழுநிலையில் திருத்தி நிறைவேற்ற முடியும் எனவும்,  ஏனைய விடயங்களை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது என சபாநாயகர் நேற்று அறிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.