“நீர்ப்பாசன செழுமை” நிகழ்ச்சித்திட்ட கலந்துரையாடல்.
“நீர்ப்பாசன செழுமை” நிகழ்ச்சித்திட்ட கலந்துரையாடல்
அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடைய அறிவுறுத்தலுக்கு அமைவாக நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டலில் செயற்படுத்தப்படுகின்ற “நீரின் சுபீட்சம்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமிய குளங்களைஅண்டியுள்ள 5000 விவசாய நீர்ப்பாசன தொகுதிகளை மறு சீரமைக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தினை மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) காலை 9.30மணிக்கு நடைபெற்றது .
நாட்டிலுள்ள 5000 விவசாய நீர்ப்பாசன தொகுதியுடன் தொடர்புடையதாக அத்தியாவசியமாக மறுசீரமைக்கும் பணிகளையும், அதியுயர் தொழில்நுட்பத்துடன் கூட்டிணைந்த நீர்ப்பயன்பாட்டு செயன்முறைகளை அறிமுகப்படுத்துவதற்கென விசேட மற்றும் துரித தேசிய நிகழ்ச்சித் திட்டமான நீர்ப்பாசன செழுமைத் திட்டம் 2020பெரும் போகத்தில் ஆரம்பித்து எதிர்வரும் இரண்டு வருட காலத்தினுள் இலக்கிடப்பட்டு செயற்படுத்துவதற்கு நீர்ப்பாசன அமைச்சு தீர்மானித்துள்ளது.
மழை நீர் சேகரிப்பின் பொருட்டு வாவிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் தண்ணீர் கொள்ளவினை மேல் உயர்த்தும் பொருட்டு கிராமிய மற்றும் ஏனைய வாவிகள், நீர்த் தேக்கங்களை சிறந்த தரத்திற்கமைவாக மறுசீரமைப்பு செய்யும் நிகழ்ச்சித் திட்டமாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத் திட்டத்தை செயன்முறைப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் இத் திட்டத்திற்கு பொருத்தமான இடங்கள் குறித்த விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர், மாவட்ட விவசாய பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்கள மாவட்ட பணிப்பாளர் மற்றும் பொறியாளர், பிரதேச செயலாளர்கள்,கமநல சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசனபணிப்பாளர் (முருங்கன்), உதவிப் பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.