“நாம் சகோதரர்களாக ஒன்றாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்” – ஜனாதிபதி அனுர உலகை நோக்கிய அழைப்பு (Video)

உலகளாவிய காலநிலை பிரச்சினைகள் ஏழை அல்லது பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரின் வீட்டு வாசல்களையும் தட்டுகின்றன என்றும், எல்லைகளை மீறிச் செல்லும் சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய குடிமக்களாகிய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அவர் இன்று (12) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2025 உலக அரசுகள் உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பொருளாதார வளர்ச்சி, புதுமை மற்றும் அரச நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பான இலங்கையின் பார்வை என்ற தலைப்பில் தனது உரையை நிகழ்த்தினார். நிலையான அபிவிருத்தி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு இங்கு வலியுறுத்தப்பட்டது.

மனிதகுலத்துடன் தொடர்புடைய முக்கிய அம்சங்களின் எதிர்கால உத்திகள் மற்றும் திட்டங்களை மேம்படுத்துவதில் இந்த உச்சி மாநாடு ஒரு உந்து சக்தியை வழங்கும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கூட்டு உலகளாவிய நடவடிக்கை மற்றும் ஒருங்கிணைந்த முன்னணி அவசியம் என்றும் கூறினார்.

சமூக நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஒரு தரப்படுத்தப்பட்ட அரசுக்கும் அதே போல் திறமையான உலகிற்கும் முக்கியமானது என்றும், ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்களை முறையாக அமல்படுத்துதல், குறைந்த வருமானம் மற்றும் நிலையற்ற சமூகங்களுக்கு முறையான ஆதரவை வழங்குதல் மற்றும் அதிகாரிகளின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக சுதந்திர ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு இடம் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார்.

டிஜிட்டல் அணுகல் உரிமைகள், சுற்றுச்சூழல் உரிமைகளுடன் 1948 மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலின் புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய பிரகடனத்தின் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

உலகளாவிய பொருளாதார நிதியுதவியில் கடுமையான நிபந்தனைகள், எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய பெரிய கடன்கள் மற்றும் பரந்த இறையாண்மை கடன் நெருக்கடியை எதிர்கொள்ள தற்போதைய சர்வதேச நிதி அமைப்பு பலவீனமாக தயாராக இருப்பதால் உலகளாவிய பார்வை மிகவும் சிக்கலான சூழ்நிலைக்கு வந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நவீன உலகிற்கு நீதியாக பொருந்தக்கூடிய நிதி சீர்திருத்தங்களுக்கு மாறுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

மனித மைய எதிர்கால அபிவிருத்தி பற்றிய கருத்துக்களை வெளியிட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, வலுவான சைபர் பாதுகாப்பு செயல்முறைக்கு உலகம் மாறுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். ரோபோவின் பயன்பாடு காரணமாக வேலை இழக்கும் மனித வளங்களை மேம்படுத்துவதற்காக கல்வி, திறன் மேம்பாடு மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை கண்டறிந்து முறையான வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், அதற்காக உலக தலைவர்கள் கூட்டாக பணியாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி நினைவுபடுத்தினார்.

“நாம் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நமது இதயங்களில் “லப் டப்” ஒலி ஒன்றாக இணைந்து உலகை கட்டியெழுப்ப வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறது” என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார்.

மார்ட்டின் லூதர் கிங்கின் “நாம் சகோதரர்களாக ஒன்றாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்” என்ற கூற்றை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி, “அழகான வாழ்க்கை மற்றும் வளமான நாடு” கட்டியெழுப்ப 2024 இல் இலங்கை மக்களும் இணைந்ததாக குறிப்பிட்டார்.

இந்த வரலாற்று உச்சி மாநாட்டின் முன் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, “நாம் அனைவரும் ஒன்றிணைந்து அழகான வாழ்க்கையையும், அழகான உலகையும் உருவாக்குவோம்” என்று உலக அரசுகள் உச்சி மாநாட்டு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.