இந்தியப் பிரதமர், அமெரிக்கத் துணை அதிபர் பாரிசில் சந்திப்பு

அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வேன்ஸ், அவருடைய மனைவி உஷா, அவர்களின் இரு மகன்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) சந்தித்தார். வேன்ஸ் குடும்பத்தாருடன் தாம் எடுத்துக்கொண்ட படங்களைப் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.

“அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வேன்ஸ், அவருடைய குடும்பத்தாருடன் அற்புதமான சந்திப்பை நடத்தினேன். பல்வேறு தலைப்புகள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம். அவர்களின் மகன் விவேக்கின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு அவர்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சி,” என்றார் பிரதமர் மோடி.

இதற்கிடையே, கூகல் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சையையும் பிரதமர் மோடி பாரிசில் சந்தித்தார். செயற்கை நுண்ணறிவு செயல் உச்சநிலை மாநாட்டிற்கு இடையே சந்தித்த அவர்கள், இந்தியாவின் மின்னிலக்க உருமாற்றத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து கலந்தாலோசித்தனர்.

அச்சந்திப்பைத் தொடர்ந்து, சமூக ஊடகத்தில் திரு பிச்சை தமது எண்ணங்களைப் பகிர்ந்தார்.

“பாரிசில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. செயற்கை நுண்ணறிவை இந்தியாவுக்குக் கொண்டுவரும் அற்புதமான வாய்ப்புகள் குறித்து நாங்கள் கலந்தாலோசித்தோம். இந்தியாவின் மின்னிலக்க உருமாற்றத்தில் நாங்கள் அணுக்கமாக இணைந்து செயலாற்றுவதற்கான வழிகள் குறித்தும் பேசினோம்,” என்றார் திரு பிச்சை.

Leave A Reply

Your email address will not be published.