டிரம்புக்குப் பின் நெட்டன்யாகுவும் கெடு: ஹமாஸ் அனைத்துப் பிணைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அனைத்துப் பிணைக்கைதிகளையும் சனிக்கிழமைக்குள் (பிப்ரவரி 15) ஹமாஸ் விடுவிக்க வேண்டும், இல்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ள நிலையில் இஸ்ரேலியப் பிரதமரும் அதே கெடுவை விதித்துள்ளார்.
சனிக்கிழமை மதியத்திற்குள் அனைத்துப் பிணைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று கூறிய நெட்டன்யாகு, அப்படி நடக்காவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
“ஹமாஸ் தோற்கடிக்கப்படும்வரை தாக்குதல் தொடரும்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.
நெட்டன்யாகுவின் இறுதி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஹமாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இஸ்ரேலின் எச்சரிக்கை, போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கிறது என்று அதில் ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
நெட்டன்யாகு, தற்காப்பு, வெளியுறவு, தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியபிறகு இஸ்ரேலின் எச்சரிக்கை வெளியானது.
ஏறக்குறைய 16 மாத காலமாக நடந்த போருக்குப் பிறகு, ஜனவரி 19ஆம் தேதி போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் தொடங்கியது.
ஹமாஸ் படிப்படியாக பிணைக்கைதிகளை விடுவித்து வருகிறது. ஆனால் பிப்ரவரி 10ஆம் தேதி இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம்சாட்டிய ஹமாஸ், அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை பிணைக் கைதிகளை விடுவிக்கமாட்டோம் என்று தெரிவித்தது.
இதையடுத்து, “சனிக்கிழமை நண்பகலுக்குள் பிடித்துவைத்துள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் திருப்பி அனுப்பவில்லை என்றால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும். ஹமாஸ் தோற்கடிக்கப்படும் வரை ராணுவம் சண்டையிடும்,” என்று திரு நெட்டன்யாகு கூறினார்.