அரிசி, பணம் கிடைப்பதால் மக்கள் வேலைசெய்ய விரும்புவதில்லை: உச்ச நீதிமன்றம்

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.

நியாய விலைக் கடைகள் மூலம் இலவச அரிசியும் பணமும் கிடைப்பதால் மக்கள் வேலை[Ϟ]செய்ய விரும்புவதில்லை என்று நீதிபதிகள் பி.ஆர். கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாசி அடங்கிய அமர்வு கூறியது.

நகர்ப் பகுதிகளில் உள்ள வீடற்றவர்களுக்குக் காப்பிட உரிமை வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர்கள் இவ்வாறு தெரிவித்ததாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

“கெடுவாய்ப்பாக, இத்தகைய இலவசங்களால் மக்கள் வேலைசெய்ய விரும்புவதில்லை. அவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. எந்த வேலையும் செய்யாமலேயே அவர்களுக்குப் பணம் தரப்படுகிறது,” என்று நீதிபதி கவாய் கூறினார்.

அதற்குப் பதிலாக, வீடற்றவர்களையும் சமுதாயத்தின் ஓர் அங்கத்தினராக்கி, அவர்களை நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கச் செய்யலாம் என்றும் நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர்.

நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்தை இறுதிசெய்யும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது என்று தலைமை அரசு வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி நீதிபதிகள் அமர்விடம் தெரிவித்தார்.

அத்திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பில் உறுதியான பதிலை அரசு அளிக்கவேண்டும் என்று நீதி[Ϟ]பதிகள் அவரிடம் அறிவுறுத்தினர்.

ஆறு வாரங்களுக்குப்பின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நகரங்களில் வசிக்கும் 2.5 கோடி குறைந்த வருமானக் குடும்பங்களின் சமூக – பொருளியல் நிலையை மேம்படுத்துவதும் அவர்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவிப்பதுமே நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்தின் குறிக்கோள்.

Leave A Reply

Your email address will not be published.