பிறப்புறுப்பில் ‘டம்பெல்’லைக் கட்டித் தொங்கவிட்டு ராகிங் செய்த 5 மாணவர்கள் கைது

கடந்த மூன்று மாதகாலமாக முதலாமாண்டு மாணவர்கள் சிலரைப் பகடிவதை (ragging) செய்து, துன்புறுத்தி வந்ததாகக் கூறி தாதிமைக் கல்லூரி மாணவர்கள் ஐவரை இந்தியாவின் கேரள மாநிலக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

கோட்டயம் அரசு மருத்துவத் தாதிமைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டில் பயிலும் அந்த ஐந்து மாணவர்களும் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவர்கள் அறுவர் துன்புறுத்தலை எதிர்கொண்டனர்.

மூத்த மாணவர்கள் கவராயம் (compass) போன்ற கூர்மையான பொருள்களைக் கொண்டு அந்த ஆறு மாணவர்களின் உடலில் காயம் விளைவித்ததாகச் சொல்லப்படுகிறது.

சில மாணவர்களின் பிறப்புறுப்பில் உடற்பயிற்சி எடைக்கருவியான ‘டம்பெல்’லைக் கட்டித் தொங்கவிட்டதாகவும் கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்ததாகவும் வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளிக்க வைப்பதாக உள்ளன.

தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் சொல்லக்கூடாது என்றும் அவர்கள் மிரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், மூத்த மாணவர்களின் கொடுமைகள் தொடர்ந்ததால் அவற்றைத் தாங்க முடியாமல் அந்த முதலாமாண்டு மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகாரளித்தனர். அதனைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் அந்த மூத்த மாணவர்கள்மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், சாமுவேல் ஜான்சன், என்.எஸ். ஜீவ், கே.பி. ராகுல் ராஜ், சி. ரிஜில் ஜீத், என்.பி. விவேக் ஆகிய ஐந்து மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கொச்சியில் அண்மையில் சக மாணவர்களின் பகடிவதையைத் தாங்க முடியாமல் 15 வயது மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இப்போதைய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதேபோல, 2024 நவம்பரில் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த தாதிமைக் கல்லூரி மாணவர் ஒருவர் வகுப்புத்தோழர்கள் மூவர் கிண்டல் செய்ததால் உயிரை மாய்த்துக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.