திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகும் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக சார்பில் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். ஈராண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின் பதவிக்காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடையும் நிலையில், மதிமுக தலைவர் வைகோ, திமுக எம்பிக்கள் அப்துல்லா, வில்சன், சண்முகம், அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் மாதம் முடிவடைய உள்ளது.
இந்த ஆறு இடங்களுக்கும் வரும் ஜூலை மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் நான்கு பேர் போட்டியிடலாம் என்பதால், அதில் ஒருவராக கமல்ஹாசனுக்கு வாய்ப்புத் தரப்படும் என்று தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்தியா கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு அளித்து பிரசாரம் செய்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட கோவை தொகுதி கேட்கப்பட்டதாகவும், இறுதியில் மாநிலங்களவை பதவி கொடுக்க திமுக சம்மதம் தெரிவித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின.
சென்னையில் உள்ள மநீம அலுவலகத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அமைச்சர் சேகர் பாபு புதன்கிழமை பேசியுள்ளார். அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டபோதும், அதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சந்திப்பில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்தும் இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.