முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 49 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இலங்கை, ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கொழும்புவில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (4), அவிஷ்கா (1), கமிந்து மெண்டிஸ் (5), குசால் மெண்டிஸ் (19), ஜனித் லியனகே (11) ஏமாற்றினர். இலங்கை அணி 55 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.

பின் இணைந்த கேப்டன் சரித் அசலங்கா, துனித் வெல்லாலகே ஜோடி நம்பிக்கை தந்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்த போது வெல்லாலகே (30) அவுட்டானார். வணிந்து ஹசரங்கா (7), மகேஷ் தீக் ஷனா (2) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய அசலங்கா (127 ரன், 5 சிக்சர், 14 பவுண்டரி) ஒருநாள் அரங்கில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார்.

இலங்கை அணி 46 ஓவரில், 214 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் சீன் அபாட் 3, ஸ்பென்சர் ஜான்சன், ஆரோன் ஹார்டி, நாதன் எல்லிஸ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு மாத்யூ ஷார்ட் (0), ஜேக் பிரேசர்-மெக்குர்க் (2), கூப்பர் கன்னோலி (3) ஏமாற்றினர். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (12), மார்னஸ் லபுசேன் (15) நிலைக்கவில்லை. அலெக்ஸ் கேரி (41), ஆரோன் ஹார்டி (32), சீன் அபாட் (20) ஓரளவு கைகொடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி 33.5 ஓவரில் 165 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஆடம் ஜாம்பா (20) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் மகேஷ் தீக் ஷனா 4, அசிதா பெர்ணான்டோ, துனித் வெல்லாலகே தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

Leave A Reply

Your email address will not be published.