இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளி கட்டுநாயக்காவில் கைது.
இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்று, அங்கு கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியிருந்ததால் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட ஒருவர் நேற்று (12) இரவு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய போது விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மந்தலகல பொம்புகலகே சுமித் பிரியந்த (46) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவர் இரத்தினபுரி, குருவிட்ட பகுதியைச் சேர்ந்தவர்.
இவர் இரத்தினபுரி, குருவிட்ட பகுதியில் 50 லட்சம் ரூபாய் கப்பம் பெற்றமை, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை மற்றும் மிரிஹான பகுதியில் கைக்குண்டு வைத்திருந்தமை மற்றும் சில கொலைகளை செய்தமை தொடர்பில் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
அங்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் படகில் ஏறி இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். இந்தியாவில் கடவுச்சீட்டு இல்லாமல், சட்டவிரோதமாக நுழைந்ததால் இந்திய பாதுகாப்புப் பிரிவினர் அவரை மீண்டும் நாட்டிற்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நபர் நேற்று இரவு 10.15 மணிக்கு சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-124 மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது, விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இன்று (13) காலை கட்டுநாயக்கா விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.