அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநரை சந்தித்த மோடி .

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக பொறுப்பேற்றுள்ள அந்நாட்டின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டை சந்தித்துப் பேசினார்.
ஐரோப்பிய நாடான பிரான்சுக்கு மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வாஷிங்டன் சென்றடைந்தார்.
வெள்ளை மாளிகை அருகே உள்ள அதிபரின் விருந்தினர் மாளிகையான, ‘பிளேர் ஹவுஸ்’ல் பிரதமர் தங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை இன்று அதிகாலை சந்தித்து பேச உள்ளார்.
முன்னதாக, அமெரிக்க தேசிய உளவுத்துறையின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ள ஹிந்து – அமெரிக்கரான துளசி கப்பார்டை பிரதமர் நேற்று சந்தித்துப் பேசினார்.
அதன் பின் தன் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் புலனாய்வுத்துறையில் மிக உயர்ந்த பதவியை பெற்றுள்ள துளசிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்தியா – அமெரிக்கா நட்புறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தோம்.
அதை மேலும் வலுப்படுத்துவதில் துளசி மிகவும் தீவிரமாக உள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து நம் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரதமர் மோடி – துளசி கப்பார்ட் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களில் உளவுத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.