நாமல் ராஜக்பக்ஷ , வழக்கறிஞர் பட்டம் பெற்ற விதம் குறித்து CID விசாரணை ஆரம்பம்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரியில் தேர்வு ஒன்றில் சட்டவிரோதமாக கலந்து கொண்டதாகக் கூறி, ‘ஊழல், மோசடி மற்றும் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி’ என்ற அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் துறை முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சமூக வலைதளத்தில் ஒளிபரப்பான நேர்காணலில், நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரியில் நடந்த தேர்வில் இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் கலந்து கொண்டு உதவி பெற்று , சட்டவிரோதமாக வழக்கறிஞர் தகுதி பெற்றதாக ஒரு அறிக்கை வெளியானது.
அந்த அறிக்கையின்படி, ஊழல், மோசடி மற்றும் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பு இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, பதில் பொலிஸ் மா அதிபர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி முழுமையான விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மோசடி குற்றச்சாட்டு
2010 அக்டோபரில் நடந்த சட்டக் கல்லூரித் தேர்வில் நாமல் ராஜபக்ஷவுடன் இறுதி ஆண்டு தேர்வில் கலந்து கொண்ட சுவிசில் வாழும் துஷார ஜெயரத்ன என்பவர், சட்டக் கல்லூரி இறுதித் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே பெறப்பட்டு, இணைய வசதியுடன் கூடிய கணினியுடன் ஒரு சிறப்பு அறையில் இருந்து தேர்வு எழுதி, அனைத்து தேர்வு விதிகளையும் மீறி தன்னிச்சையாக நடந்து கொண்டதற்காக நாமல் ராஜபக்ஷவின் வழக்கறிஞர் பதவியை ரத்து செய்யக் கோரி முன்பு தலைமை நீதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.