பதுளை நீர்வீழ்ச்சியில் மூழ்க போன இளைஞரை காப்பாற்றிய மலேசிய பெண் யூடியூபர் (Video)

பதுளை பகுதியில் உள்ள பிரபலமான தியாலும நீர்வீழ்ச்சி அருகே நடந்த ஒரு விபத்தில், இலங்கைக்கு சுற்றுலா வந்த மலேசியப் பெண் ஒருவர் விரைவாகச் செயல்பட்டு, மூழ்கிக் கொண்டிருந்த இலங்கைப் இளைஞர் ஒருவரை காப்பாற்றியுள்ளார்.

ஃபரா புத்ரி முல்யானி என்ற இந்த மலேசிய சுற்றுலாப் பெண், யூடியூப்பில் வீடியோக்களைப் பதிவேற்றி சுற்றுலா வீடியோக்களுக்கு பிரபலமானவர்.

இலங்கைக்குச் சுற்றுலா வந்திருந்தபோது இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. அவரது தனிப்பட்ட வீடியோ கமராவில் பதிவான காட்சிகளின்படி, ஆழமான பகுதியில் காலடி வைத்த பிறகு நீரில் விழுந்த இளைஞனின் நண்பர்கள் உதவி கேட்டு கூச்சலிடுவது தெரிகிறது.

அங்கு இருந்த மலேசியப் பெண் உடனடியாகச் செயல்பட்டு , கமராவோடே தண்ணீரில் குதித்து இளைஞரை கரைக்குக் கொண்டு வர முடிந்துள்ளது. பின்னர் உயிர் தப்பிய அவரை , அவரது நண்பர்கள் அழைத்துச் செல்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த ஃபரா புத்ரி முல்யானி, நீர்வீழ்ச்சிகளில் உள்ள ஆபத்தான சூழ்நிலைகள் குறித்து மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“இந்த சம்பவம் எனது பயணத்தின் தன்மையை முற்றிலுமாக மாற்றியது. நீர்வீழ்ச்சிகளில் உள்ள ஆபத்துகள் குறித்து அதிகமானோர் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் நீர் நிலையில் மிகவும் ஆழமான பகுதியும் உள்ளன, ஆனால் நீச்சலுக்கு உதவும் நீர் ஓட்டம் கீழே இல்லாததால் சிலர் உதவியற்றவர்களாகிறார்கள்!

நீங்கள் நீச்சல் வீரர் இல்லையென்றால், அது இன்னும் ஆபத்தானது! உண்மையில், இந்த சம்பவத்திற்குப் பிறகு நான் பல விஷயங்களைப் பற்றி யோசித்தேன்,” என அவர் சமூக ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அந்த சம்பவத்தின் வீடியோ துண்டுகளையும் Istagramல் பதிவேற்றியுள்ளார்.

அவரது வீரச் செயல் சமூக ஊடகங்களிலும் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.