தமிழக மறைந்த முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தா​வின் சொத்துக்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைப்பு.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்​து ஆவணங்கள் 11,344 புடவைகள் 750 காலணிகள் 91 கைக்கடிகாரங்கள் ஒப்படைப்பு!

தமிழக முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தா​வின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்​துக்​களின் ஆவணங்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்​துறை பொலிஸாரிடம் ஒப்படைக்​கப்​பட்டன.

1991-96 காலகட்​டத்​தில் வருமானத்​துக்கு அதிகமாக சொத்​துக்கு​வித்​ததாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குதொடரப்​பட்​டது.

இவ்வழக்​கின் விசா​ரணை​யின்​போது தமிழக லஞ்ச ஒழிப்புத்​துறை பொலிஸார் அவரது வீட்​டில் சோதனை நடத்தி தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகள், புடவை​கள், காலணி​கள், கைக்​கடி​காரங்​கள், வீட்டு உபயோக பொருட்​கள், சொத்​துக்​களின் ஆவணங்கள் உள்ளிட்​ட​வற்றை கைப்​பற்றினர்.

இந்த வழக்கு தமிழகத்​தில் இருந்து பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​ட​தால், இந்த பொருட்​களும் கர்நாடக அரசின் கருவூலத்​தில் பத்திரமாக‌ வைக்​கப்​பட்டன.

இவ்வழக்​கில் நீதிபதி ஜான் மைக்​கேல் டி’குன்ஹா கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை​யும், ரூ.100 கோடி அபராத​மும் விதித்​தார்.

மேலும், வழக்​கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அரசு ஏலம் விட்டு, வழக்கை நடத்திய கர்நாடகா​வுக்கு உரிய தொகையை வழங்க வேண்​டும் என தீர்ப்​பளித்​தார்.

வழக்கு நிறைவடைந்து 10 ஆண்டு​களுக்கு மேலாகி​யும் கர்நாடக அரசுக்கு வழக்கை நடத்திய தொகை வழங்​கப்​பட​வில்லை.

எனவே, பெங்​களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கடந்த 2023-ல் ஜெயலலி​தா​வின் நகைகளை ஏலம் விட வேண்​டும் என பெங்​களூரு குடிமை​யியல் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இவ்வழக்கை விசா​ரித்த நீதிபதி ஹெச்​.ஏ.மோகன், “கர்​நாடக மாநில கருவூலத்​தில் உள்ள நகைகள், புடவை​கள், சொத்​துக்​களின் ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்​துறை​யிடம் ஒப்படைக்க வேண்​டும். சொத்​துக்கு​விப்பு வழக்கை நடத்திய கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடியை தமிழ்​நாடு அரசு வழங்க வேண்​டும்” என தீர்ப்​பளித்​தார்.

இந்நிலை​யில், ஜெயலலி​தா​வின் அண்ணன் மகள் தீபா, தனது அத்தை​யின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்​டும் என மனு தாக்கல் செய்​தார்.

அந்த மனுவை கர்நாடக உயர் நீதி​மன்றம் கடந்த ஜனவரி 13 ஆம் திகதி தள்ளுபடி செய்​தது. இதை எதிர்த்து தீபா உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்த மனுவை​யும் நீதி​மன்றம் நேற்று முன் தினம் தள்ளுபடி செய்​தது.

இதையடுத்து, பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி மோகன் முன்னிலை​யில் ஜெயலலி​தா​வின் சொத்​துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்​கும் பணிகள் நேற்று தொடங்​கின.

கர்நாடக கருவூலத்​தில் இருந்து த‌ங்கம், வெள்ளி, வைரநகைகள், சொத்து​களின் ஆவணங்கள் அடங்கிய 6 பெட்​டிகள் கொண்டு​வரப்​பட்டன. அதனை தமிழக அரசின் உள்துறை இணைச் செயலாளர் ஹனி மேரி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி எஸ்.பி. விமலா ஆகியோர் தலைமையிலான மதிப்​பீட்டு குழு ஆவணங்​களில் உள்ளவாறு சரிபார்த்து, மதிப்​பீடு செய்து பெற்று​கொண்​டனர். பின்னர் அந்த நகைகள் அனைத்​தும் புகைப்​படம், வீடியோ மூலம் பதிவு செய்​யப்​பட்​டது.

முதல்​கட்​டமாக 1,562 ஏக்கர் மதிப்​பிலான நிலத்​தின் ஆவணங்கள் ஒப்படைக்​கப்​பட்டன. பின்னர் 11 ஆயிரத்து 344 புடவை​கள், 750 காலணி​கள், 91 கைக்​கடி​காரங்கள் ஆகியவை ஒப்படைக்​கப்​பட்டன. இதையடுத்து சொத்​துப் பட்டியலில் இருந்த 468 தங்க, வைர நகைகள், ரத்தின கற்கள் சரிபார்க்​கப்​பட்டன. அதில் வரிசை எண் 155 வரையிலான நகைகள் நேற்று சரிபார்க்​கப்​பட்டு, மதிப்​பீடு செய்​யப்​பட்டு ஒப்படைக்​கப்​பட்டன.

மொத்தம் 27 கிலோ எடையுள்ள நகைகள் ஒப்​படைக்​கப்​பட்டன.

எஞ்​சி​யுள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்​கள், சால்​வை​கள், மின்னணு சாதனங்​கள் உள்​ளிட்​டவை இன்று தமிழக அதிகாரி​களிடம் ஒப்​படைக்​கப்பட உள்ளதாக நீ​தி​மன்ற வட்​டாரங்​கள்​ தெரி​வித்​துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.