ஹமாஸ், அடுத்தகட்டமாக மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்தது
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250215-WA0013.jpg)
பிணைக்கைதிகள் பரிமாற்றத்தின் அடுத்தகட்டமாக மூன்று இஸ்ரேலியர்கள் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
லெய்ர் ஹார்ன், சகுயி டெகேல்-சென், சாஷா (அலெக்சாண்டர்) ட்ரஃபானவ் ஆகியோர் அம்மூவரும் காஸாவின் தெற்கு வட்டாரமான கான் யூனிஸ் நகரில் பிணைக்கைதி பரிமாற்றப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டனர்.
அங்கு காத்திருந்த செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
காஸா மக்கள் எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காக ஆயுதமேந்திய போராளிகள் அந்த மூவரையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
பரிமாற்றத் தளத்தில் எகிப்து மற்றும் கத்தாரின் நடுநிலையாளர்களும் அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.
போர்நிறுத்த உடன்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ள பிணைக்கைதி பரிமாற்றத்தின் ஆறாம் கட்டத்தில் 300 பாலஸ்தீன பிணைக்கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு ஜனவரி 19 முதல் நடப்பில் உள்ளது.
அந்த உடன்பாட்டின்படி இதுவரை 16 இஸ்ரேலியர்களையும் ஐந்து தாய்லாந்து குடிமக்களையும் ஹமாஸ் விடுவித்துள்ளது. அதற்கு ஈடாக நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது.
இவ்வாரத் தொடக்கத்தில் பிணைக்கைதி பரிமாற்றத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஹமாஸ் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
போர்நிறுத்த உடன்பாட்டின் விதிமுறைகளை இஸ்ரேல் மீறிவிட்டதால் அடுத்தகட்ட கைதிப் பரிமாற்றத்தைத் தற்காலிமாக நிறுத்தப்போவதாக அது அறிவித்தது.
அதனைக் கண்டித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமை 12 மணிக்குள் எல்லா பிணைக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் தரப்பிடம் இருந்தும் மிரட்டல் வெளியானது.
மோதல் போக்கைத் தவிர்க்கும் விதமாக அரபுத் தலைவர்கள் சமரசத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு, பிணைக்கைதிகள் விடுவிப்பைத் தொடர ஹமாஸ் குழு சம்மதித்தது. தற்போது நடப்பில் இருப்பது போர்நிறுத்தத்தின் முதற்கட்ட உடன்பாடு.
ஆறு வாரங்கள் கழித்து இரண்டாம் கட்ட உடன்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும்.
2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி பிணைக்கைதிளாக ஹமாஸ் குழு பிடித்துச் சென்ற அனைவரையும் விடுவிக்க இரண்டாம் கட்ட உடன்பாடு வலியுறுத்தும். அதில் சிக்கல் ஏற்பட்டால் போர் மீண்டும் தொடங்கும் அபாயம் உள்ளது.