அமெரிக்கா இரண்டாவது விமானத்தில் 119 பேரை இந்தியாவுக்கு நாடு கடத்தியது

அமெரிக்கா சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில் இரண்டாவது விமானம் 119 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்தியா திரும்பவிருக்கிறது.
இரண்டாவது விமானமும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானம் அவர்களைக் கொண்டு வருமா அல்லது இந்தியா, அவர்கள் திரும்ப ஏற்பாடு செய்யுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் 104 பேரை கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அமெரிக்கா நாடு கடத்தியது.
அமிர்தசரசில் இறக்கிவிடப்பட்ட அவர்களது கால்களில் சங்கிலி போடப்பட்டிருந்தது.
இவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இதன் தொடர்ச்சியாக 2வது முறையாக மேலும் 119 இந்தியர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.
முன்னதாக மேற்கொள்ளப்பட்டதைப் போல, இம்முறையும் அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் பஞ்சாபில் அமிர்தசரஸ் அனைத்துலக விமான நிலையத்தில் இந்தியர்கள் தரையிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் முன்புபோல இந்தியர்கள் காலில் சங்கிலி போடப்பட்டிருக்காது என நம்பப்படுகிறது.
இவர்களில் 67 பேர் பஞ்சாப், 33 பேர் ஹரியானா, எட்டுப் பேர் குஜராத், மூன்று பேர் உத்தரப் பிரதேசம், இரண்டு பேர் மகாராஷ்டிரா, இரண்டு பேர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
முதல் விமானத்தில் வந்தவர்கள் பெரும்பாலோர் சட்டவிரோதமான பாதையில் அமெரிக்காவில் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களில் பலர் இடைத்தரகர்களுக்கு பெரும் பணம் கொடுத்து பல மாதங்களாக பயணம் மேற்கொண்டு அமெரிக்காவில் நுழைந்துள்ளனர். பஞ்சாப், ஹரியானா அரசாங்கம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய உதவும் பல இடைத்தரகர்களை கைது செய்துள்ளது.
இதுவரை இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சட்டவிரோதக் குடியேறிகளில் தென்னிந்தியாவைச் சேர்ந்த குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை.
பிரதமர் மோடி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டபோது சட்டவிரோதக் குடியேறிகள் விவகாரம் குறித்து டோனல்ட் டிரம்ப்புடன் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது விமானத்தில் 119 இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், தங்கள் நாடுகளுக்குத் திரும்பும்வரை ஒவ்வொரு வாரமும் நாடு கடத்தும் நடவடிக்கை தொடரும் என்று அமெரிக்க நிர்வாக வட்டாரம் தெரிவிக்கிறது.
கேள்வி எழுப்பும் பஞ்சாப் முதல்வர்
இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன் வரும் விமானங்கள் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட என்ன காரணம்? என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பஞ்சாப் மக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ள அவர், அக்குறிப்பிட்ட விமானங்களை குஜராத்தில் ஏன் தரையிறக்கவில்லை என்றும் கேட்டுள்ளார்.