40 பயணிகளை தப்ப வைத்து விட்டு , மாரடைப்பால் உயிரிழந்த , பேருந்து ஓட்டுநர்

திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் மாரடைப்பால் வியாழக்கிழமை நள்ளிரவு பலியானார்.
நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, பேருந்தைச் சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி 40 பயணிகளின் உயிரை ஓட்டுநர் காப்பாற்றியுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி 40 பயணிகளுடன் தனியார் பேருந்து வியாழக்கிழமை நள்ளிரவு 11 மணிக்குப் புறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலூர் பிரிவு சாலை அருகே பேருந்து வந்தபோது, பேருந்தை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த 48 வயது கண்ணன் என்பவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஓட்டுநர் கண்ணன் பேருந்தைச் சாமர்த்தியமாகச் சாலையின் வலதுபுறம் உள்ள நடுப்புறத் தடுப்பின் மீது ஏற்றி, விபத்து ஏற்படாமல் பயணிகளைக் காப்பாற்றி உள்ளார். ஆனால், ஓட்டுநர் கண்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
விபத்தில் இருந்து மீண்டதற்கு மகிழ்ச்சி அடைவதா, ஓட்டுநர் இறந்ததை நினைத்து வேதனை அடைவதா என்று தெரியாமல் பயணிகள் நள்ளிரவில் தவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த விராலிமலை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.