கார் விபத்தில் காயமடைந்த குமரன் எம்.பி.யை பார்க்க பிரதமர் யாழ். ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரனை பார்ப்பதற்காக பிரதமர் ஹரினி , நேற்று (15) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றார்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்த எம்.பி.யும் அவரது சாரதியும் சென்ற கார் , சாவகச்சேரி பகுதியில் லொறியுடன் மோதியதில் கார் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த எம்.பி.யும் , சாரதியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி. குமரனின் உடல்நிலை சீராகி வருவதாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதையடுத்து, எம்.பி.யின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பிரதமர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவர்களுடன் கலந்துரையாடி சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.