விஜய கொலை செய்யப்பட்டு இன்றுடன் 37 ஆண்டுகள் (Video)

இலங்கை சினிமாவின் பிரபலமான நடிகரும் , மக்கள் நாயகனுமாகிய விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் 37 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அவரது 37வது நினைவு தினம் இன்று கட்டுநாயக்கவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நடைபெற்றது.
1945 ஒக்டோபர் 09 ஆம் திகதி பிறந்த விஜய குமாரதுங்க சினிமாவில் ஹந்தானே கதாவ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
துஷாரா, ஆதரே ஹித்தெனவா தெக்கமா, ஹதரதெனமா சூரயோ, அஹஸ் கவ்வா, கங்க அத்தர, பார திகே, மஹ கெதர, கடபதக சாயா, நொம்பரா 17 உட்பட 114 திரைப்படங்களில் நடித்துள்ள விஜய 1983 முதல் 1988 வரை ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பிரபலமான நடிகர் என சரஸ்வதி விருதைப் பெற்றார்.
இந்திய – இலங்கை கூட்டு தயாரிப்பான நங்கூரம் தமிழ் திரைப்படத்திலும் நடித்தார்.
ஒரு பாடகராகவும் தனது திறமையை வெளிப்படுத்திய விஜய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அரசியலில் நுழைந்தார், பின்னர் ஸ்ரீலங்கா மஹஜன கட்சியை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார்.
1978 பெப்ரவரி 20 ஆம் திகதி சந்திரிகா பண்டாரநாயக்காவை திருமணம் செய்துகொண்ட விஜய இறக்கும் போது இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார்.
பிரபலமான நடிகர் மற்றும் திறமையான பாடகர் மட்டுமின்றி மனிதநேய அரசியல்வாதியாகவும் இருந்த விஜய குமாரதுங்க 1988 ஆம் ஆண்டு இதே நாளில் கிருலப்பன பொல்ஹேன்கொடையில் உள்ள அவரது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு கொலையாளிகளால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
அவரது 37வது நினைவு தினமான இன்று, கட்டுநாயக்கவில் உள்ள விஜய குமாரதுங்கவின் சமாதிக்கு முன்னாள் ஜனாதிபதி
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஜீவன் குமாரதுங்க, ரஞ்சன் ராமநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.