மலேசியாவுக்குள் வெளிநாட்டினரை கடத்தி வர ஆளுக்கு 4,500 ரிங்கிட் வசூலிக்கும் கும்பல்.

அதிகமான பணம் கொட்டுவதால் ஆவணமற்ற வெளிநாட்டினரை மலேசியாவுக்குள் கடத்திவர உள்ளூர்வாசிகளில் சிலர் ஆர்வம் காட்டுவதாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்து உள்ளது.

ஆவணமற்ற வெளிநாட்டினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சராசரியாக ஒரு நபருக்கு 4,500 ரிங்கிட் பணத்தை உள்ளூர்வாசிகளிடம் கொடுத்தது தெரிய வந்தது என கிளந்தான் குடிநுழைவுத் துறை இயக்குநர் முஹம்மது யூசோஃப் கான் முஹம்மது ஹஸன் தெரிவித்து உள்ளார்.

கிளந்தானில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“இந்தியா, பங்ளாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணமற்றோர் கடத்தி வரப்படுகின்றனர். அவர்கள் இங்கு வருவதற்காக கடத்தல் கும்பலிடம் அளிக்கும் தொகை அவர்கள் எந்த நாட்டினர் என்பதைப் பொறுத்து வேறுபடும்.

“மேலும் சிலாங்கூர், ஜோகூர் போன்ற பகுதிகளுக்கு வெளிநாட்டினரைக் கொண்டு செல்ல இன்னும் கூடுதல் பணத்தைக் கும்பலிடம் தரவேண்டி இருக்கும்.

“அதிகாரிகள் கண்ணில் சிக்காமல் தப்பிக்க, நேரம் பார்த்து, சட்டவிரோத எல்லைகளின் வாயிலாக அவர்களில் பெரும்பாலோர் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றனர்.

“தாங்கள் செய்யும் செயல் சட்டவிரோதம் என்று தெரிந்தும் பணத்தின் மீது உள்ள ஆசையால் கடத்தல்காரர்கள் ஆபத்தைச் சந்திக்கத் தயாராகின்றனர். அதில் வியப்பில்லை.

“கடத்தி வரப்படுவோர் அடுத்த இடத்திற்குக் கொண்டு செல்லப்படும் வரை தற்காலிக வீடுகளிலோ ஹோட்டல்களிலோ வழக்கமாகத் தங்க வைக்கப்படுகின்றனர்,” என்றார் யூசோஃப்.

Leave A Reply

Your email address will not be published.