வடகொரியாவின் அணுசக்தியை அழிக்க மீண்டும் உறுதிபூண்ட நாடுகளின் கூட்டறிக்கை.

வடகொரியாவின் அணுவாயுதங்களை முழுமையாக அழிக்க அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் உறுதிபூண்டுள்ளன. அம்மூன்று நாடுகளும் இணைந்து பிப்ரவரி 15ஆம் திகதி (சனிக்கிழமை) வெளியிட்ட கூட்டறிக்கையில் இவ்வாறு தெரிவித்தன.

மேலும், அதற்கான உறுதிமொழிகளை இம்மூன்று நாடுகளும் புதுப்பித்துள்ளதாக அதில் குறிப்பிட்டன.

ஜெர்மனியில் நடந்த மியூனிக் பாதுகாப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ டே-யுல்லையும் ஜப்பானின் உயர்மட்ட தூதர் தகேஷி இவாயாவையும் அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பிப்ரவரி 15ஆம் திகதி சந்தித்தார்.

தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் அவர் மேற்கொண்ட முதல் சந்திப்புக்குப் பின்னர் இந்தக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானங்களுக்கு இணங்க, வடகொரியாவின் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்கான தங்களின் உறுதியான நிலைப்பாட்டை அம்மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் மீண்டும் உறுதிப்படுத்தியதாக அக்கூட்டறிக்கை தெரிவித்தது.

மேலும், வடகொரியாவின் அணுசக்தி, ஏவுகணைத் திட்டங்கள், கிரிப்டோ நாணயங்கள் திருட்டு உள்ளிட்ட தீங்கிழைக்கும் இணையக்குற்ற நடவடிக்கைகள், ரஷ்யாவுடனான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது போன்றவற்றை குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர் என அது சொன்னது.

இதனை உடனடியாகத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் சொன்னதாகவும் அது குறிப்பிட்டது.

“எங்கள் நாட்டுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தல்களையும் நாங்கள் பொறுத்துகொள்ள மாட்டோம்,” என வடகொரியாவுக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தன.

மேலும், வடகொரியாவுக்கு எதிரான அனைத்துலகத் தடைகளை அதிகரிக்கவும் அதை வலுப்படுத்தவும் ஒருபோதும் தயங்கமாட்டோம் என அவை உறுதிபூண்டன.

Leave A Reply

Your email address will not be published.