மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மன்னார்  நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடையுத்தரவு.

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெறலாம் என்ற அடிப்படையில் இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக,நஷ்டம்,தொந்தரவு ஏற்படலாம் என்ற வகையில் மன்னார் பொலிஸாரால் கோரப்பட்ட தடை உத்தரவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (17.02) மாலை அனுமதி வழங்கியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிய மணல் அகழ்வு மேற்கொள்வதற்கான அனுமதி வழங்குவது தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக இரு முறை மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த போது இரு முறையும் மக்களின் எதிர்ப்பினால் அரச திணைக்களங்கள் உள்ளடங்களாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இவ்வாறான நிலையில்  மீண்டும் குறித்த அரச திணைக்களங்கள் மற்றும் ஒரியன் மினரல் நிறுவனமானது ஆய்வுக்காக மன்னார் ஓலைத்தொடுவாய் மற்றும் தோட்டவெளிப் பகுதிக்கு வருகை தரவுள்ள நிலையில் பொதுமக்கள் அணி திரண்டு போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாகப் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் போராட்டக் காரர்கள் என அடையாளப்படுத்தி சிலரின் பெயர்களை குறிப்பிட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னார் பொலிஸார் தடையுத்தரவைப் பெற்றுள்ளனர்.

குறித்த தடையுத்தரவானது  சட்டத்தரணி செல்வராஜ் டினேசன், அருட்பணி மார்கஸ் அடிகளார் உள்ளடங்களாக  10 பேருக்கு எதிராக  பெறப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவின் கீழ் மக்களுக்கு இடையூறு  ஏற்படும் வகையில்   போராட்டம் மேற்கொள்ளாமல் இருத்தல் வேண்டும், மற்றும் எந்த பொது சொத்துக்களுக்கும் தனியார் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்த கூடாது .மிக முக்கியமாக மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் ஒரியன் மினரல் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நீதிமன்ற கட்டளை இன்று திங்கட்கிழமை(17) ஆம் திகதி தொடக்கம் எதிர் வரும் 14 நாட்களுக்கு வலுவுள்ளதாக காணப்படும் என குறித்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave A Reply

Your email address will not be published.