மக்கள் ஆணை எதுவுமின்றி கொடூர சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் 20ஐ ஒருபோதும் ஆதரிக்காது கூட்டமைப்பு! – சம்பந்தன்
“அரசு முன்வைத்துள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவு நாட்டை சர்வாதிகாரத்தின் பக்கம் கொண்டு செல்கின்றது. ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கான எந்தவொரு ஆணையும் மக்களிடமிருந்து பெறப்படவில்லை. அதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20ஆவது திருத்தச் சட்ட வரைவை எதிர்க்கின்றது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்ட வரைவு மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பல தரப்புக்களினதும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை அரசு முன்வைத்துள்ளது. இந்த 20ஆவது திருத்தத்தை எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நிராகரிக்கின்றது.
மக்கள் இறையாண்மையானது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும். சட்டவாக்கம், நிர்வாகம், நிறைவேற்று அதிகாரம் எப்போதும் இறையாண்மையை மிஞ்சிய விதத்தில் செயற்பட முடியாது. மக்கள் ஆணையின் மூலமாகத் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் கால எல்லைக்குள் முழுமையான மக்கள் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்தப்பட வேண்டும். நீதித்துறை சுயாதீனம் எந்தவித தலையீடுகளும் இல்லாது செயற்பட வேண்டும்.
அது மட்டுமன்றி தனிநபரிடம் நாட்டின் இறையாண்மை அடிபணியக்கூடாது. இறையாண்மை என்பது தனிநபரின் விருப்பம் அல்ல. இந்த மூன்று பிரதான விடயங்களும் அதனுடன் இணைந்து வாக்குரிமை, சுயாதீன ஆணைக்குழுக்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்றோரை நியமித்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றின் அதிகாரம் ஒருவருக்கு வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஆனால், அரசு முன்வைத்துள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவு நாட்டை சர்வாதிகாரத்தின் பக்கம் கொண்டு செல்கின்றது. ஜனநாயகம் மறுக்கப்பட்டு நாடு சர்வாதிகாரத்தின் பக்கம் பயணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. இப்போது நடைமுறையில் இருக்கும் 19ஆவது திருத்தச் சட்டத்தையே தொடர்ந்தும் முன்னெடுத்துக் கொண்டு செல்ல முடியும். அதில் எந்தவித முரண்பாடுகளும் ஏற்படப்போவதில்லை. மக்கள் ஆணையுடன் ஏன் இதனைத் தொடர்ந்தும் கொண்டு செல்ல முடியாது?
இந்த அரசு தேர்தலில் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையான வெற்றியைச் சாதகமாகப் பயன்படுத்தி நாட்டை சர்வாதிகார ஆட்சியின் பக்கம் மாற்றிக்கொள்ள நினைப்பது தவறு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் செயற்பாடுகளை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது.
அரசின் இந்தச் செயற்பாடுகள் நாட்டில் பிரிவினையை உருவாக்கிவிடும் என்ற அச்சம் உள்ளது. நாட்டைப் பிரிவினையின் பக்கம் கொண்டு செல்லும் எந்தவொரு செயற்பாட்டையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்காது. அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவும் இல்லை.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட வேளையில்கூட நாம் அதனை எதிர்த்து வெளிநடப்புச் செய்தோம். எனவே, எப்போதுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியானதையே செய்யும். ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கான எந்தவொரு ஆணையும் மக்களிடமிருந்து பெறப்படவில்லை என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20ஆவது திருத்தச் சட்ட வரைவை எதிர்ப்பதற்கான காரணம்.
புதிய அரசமைப்பை உருவாக்கி நெருக்கடிகளைத் தீர்க்கத் தயாராகவுள்ளோம் என்று அரசு கூறியுள்ளது. இன்று சபையில் ஆளும் தரப்பினர் அதனை மீண்டும் கூறினர். இந்த முயற்சியில் சகல மக்களின் விருப்பங்களையும் உள்ளடக்க வேண்டும். இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட அரசமைப்பில் விடப்பட்ட தவறுகளை இம்முறையும் செய்துவிடக்கூடாது.
தமிழ் மக்கள் 1956 ஆம் ஆண்டில் இருந்தே மிகத் தெளிவான ஆணை தமிழர்களின் உரிமை, நியாயங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதே. தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் உள்ளனர். எனவே, தமிழ் மக்களின் இறையாண்மையையும், உரிமைகளையும் பாதுகாக்கும் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை எவரும் புறந்தள்ளிவிட முடியாது. அதேபோல் புதிய அரசமைப்பை உருவாக்கும் வேளையில் நாட்டின் சகல மக்களின் இணக்கத்துடன் உருவாக்கப்பட வேண்டும்.
பெரும்பான்மை மக்களின் அங்கீகாரம் இல்லாத அரசமைப்பை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதேபோல் புதிய அரசியலமைப்பில் சிங்கள மக்களின் நிலைப்பாட்டை மாத்திரம் கருத்தில் கொள்ளாது தமிழ் மக்களின் நிலைப்பாட்டையும் கருத்தில்கொள்ள வேண்டும் .இல்லையென்றால் அதனையும் நாம் நிராகரிப்போம்” – என்றார்.