மகன் திருமண நன்கொடையின் ஒருபகுதியாக ரூ.2,000 கோடியில் 20 பள்ளிகள் கட்டப்படும் – அதானி அறக்கட்டளை அறிவிப்பு

புது தில்லி: தனது இளைய மகன் திருமண நன்கொடையின் ஒருபகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ.2,000 கோடியில் 20 பள்ளிகள் கட்டப்படும் என்று அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானி நடத்தி வரும் அதானி அறக்கட்டளை அறிவித்துள்ளது.
கௌதம் அதானியின் மகன் ஜீத் அதானி திருமணம் கடந்த 7-ஆம் தேதி அகமதாபாதில் ஆடம்பரம் இல்லாமல் பாரம்பரிய முறைப்படி நடந்தது. மகன் திருமண மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொள்ளும் வகையில் தனது அதானி அறக்கட்டளை மூலம் ரூ.10,000 கோடி நிதியை சமூகநலத் திட்டங்களுக்கு அதானி ஒதுக்கியுள்ளாா்.
அதன்படி ரூ.6,000 கோடியில் மருத்துவமனைகள், ரூ.2,000 கோடியில் திறன்மேம்பாட்டு மையங்கள் தொடா்பான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் இப்போது ரூ.2,000 கோடியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 20 பள்ளிகள் கட்டப்படும். உலகத்தரத்தில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை ‘கல்விக் கோயில்களாக’ இந்த பள்ளிகள் அமையும். நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இப்பள்ளிகளில் இடம் பெறும். மாணவா்களின் சமூக பொருளாதார நிலைகளைக் கடந்து அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி அறக்கட்டளை இப்போது நாட்டின் 19 மாநிலங்களில் உள்ள 6,769 கிராமங்களில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.