கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி மருமகளுக்கு எய்ட்ஸ் ஊசி போட்ட மாமியார்

வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி மருமகளுக்கு எய்ட்ஸ் ஊசி போட்ட, மாமியார் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் என்கிற சச்சினுடன் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தின் போது, பெண் வீட்டு தரப்பில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு ரூ. 15 லட்சமும், ஒரு காரும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது.
திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்றபின் மீண்டும், அபிஷேக்கின் தாயும், தந்தையும் வரதட்சணை கேட்டு அப்பெண்ணை கொடுமை செய்துள்ளனர்.
திருமணத்தின் போது வரதட்சணையாக பெற்ற பணம் மற்றும் கார் போதாது என மீண்டும், ரூ. 25 லட்சம் பணமும், ஒரு ஸ்கார்பியோ எஸ்.யு.வி. காரும் கேட்டு அப்பெண்ணை கொடுமை செய்துள்ளனர்.
ஒரு கட்டத்திற்கு மேல், அபிஷேக்கின் தாய், தந்தை அந்தப் பெண்ணை பழிவாங்கும் எண்ணத்தோடும், கொலை செய்யும் திட்டத்தோடும் எய்ட்ஸ் ஊசியை அவருக்கு செலுத்தியுள்ளனர்.
இதனால், அப்பெண்ணிற்கு உடல் நிலை சமீபகாலமாக மிகவும் மோசமடைவதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர் பரிசோதிக்கும்போது, அந்தப் பெண்ணிற்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால், உத்தரப்பிரதேசம் மாநிலம், சஹாரன்பூர் கீழமை நீதிமன்றத்தில் பெண் வீட்டார் மனு தொடர்ந்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து கங்கோ கோட்வாலி காவல்துறையினர், அபிஷேக், அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை, தாக்குதல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவக்கியுள்ளது.