துருக்கியில் போராளிகளுடன் தொடர்பு எனும் சந்தேகத்தின் பேரில்: 282 பேர் கைது.

இஸ்தான்புல்: தென்கிழக்கு துருக்கியில் தனிநாட்டுக்காகப் போராடி வரும் PKK எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 282 பேரை அந்நாட்டு காவல்துறையினர் கைதுசெய்தனர்.

அவர்களில் செய்தியாளர்கள்,அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் ஆகியோர் அடங்குவர் எனத் துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா பெப்ரவரி 18ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

பிகேகே அமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான 40 ஆண்டுகால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துருக்கியில் போராளிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி தேர்ந்தெடுக்கப்பட்ட குர்திய ஆதரவு மேயர்களை அவர்களின் பதவிகளிலிருந்து துருக்கி அரசு நீக்கி வருகிறது.

துருக்கி அதிபர் தையிப் எர்டோகனின் கூட்டாளி ஒருவர், நான்கு மாதங்களுக்கு முன்பு போராளிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சமரசப்பேச்சுக்கு அழைக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிகேகே அமைப்பின் தலைவர் அப்துல்லா ஓகலான் அது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.