போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது.

20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதவான் எம். ஃபரூக்கிடம் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபரை இம்மாதம் 25 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் மீகொட பொலிஸ் நிலையத்தின் ஊழல் மற்றும் சுற்றிவளைப்பு பிரிவில் பணியாற்றும் யாழ்ப்பாணம் கரவெட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த யோகராஜா ஜெயருபன் என்ற 30 வயது பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
சந்தேக நபர் சமூக ஊடகங்கள் மூலம் ஹட்டன் பகுதியில் கண்டறிந்த பெண்ணை சந்திக்க தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் ஹட்டன் நகருக்கு வந்துள்ளார். நகர மையத்தில் மோட்டார் சைக்கிளுடன் விபத்தில் சிக்கியிருந்த போது, ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து விசாரித்துள்ளனர். அப்போது சந்தேக நபர் பொலிஸ் அதிகாரி என்றும், அதை உறுதி செய்வதற்காக பொலிஸ் அடையாள அட்டையை காண்பிக்க பணப்பையை ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார். பணப்பையில் ஐஸ் போதைப்பொருள் பாக்கெட் இருந்ததால் சந்தேக நபரை கைது செய்ததாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் சந்தேக நபருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் குறித்து மீகொட பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சந்தேக நபரை கைது செய்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.