சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம். முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து மோதல் .

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பாகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து மோதுகின்றன. பாகிஸ்தானில் 9வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப். 19- மார்ச் 9) நடக்க உள்ளது. ஒருநாள் போட்டி ‘ரேங்கிங்’ பட்டியலில் ‘டாப்-8’ அணிகள் களம் காண்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடக்க உள்ளன. முன்பு ‘மினி உலக கோப்பை’ என அழைக்கப்பட்ட இத்தொடர், 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடக்க உள்ளது. கடைசியாக 2017ல் நடந்த தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. சொந்த மண்ணில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. சமீபத்தில் கராச்சியில் நடந்த முத்தரப்பு தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 355 ரன்னை சேஸ் செய்து வென்றது. கீப்பர், கேப்டன் ரிஸ்வான், பாபர் ஆசம், பகர் ஜமான், சல்மான் அகா, உஸ்மான் கான் விளாச காத்திருக்கின்றனர். பந்துவீச்சில் ஷாகீன் ஷா அப்ரிதி, நசீம் ஷா, ‘ஸ்பின்னர்’ அப்ரார் அகமது அசத்தலாம். 2023ல் பெங்களூருவில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை 21 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதே போல மீண்டும் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.
புதிய கேப்டன் சான்ட்னர் தலைமையில் நியூசிலாந்து அணி அசத்துகிறது. முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பின் கராச்சியில் நடந்த பைனலில் மீண்டும் பாகிஸ்தானை சாய்த்து, கோப்பை வென்றது. இன்றும் அசத்தினால், ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யலாம். டேரில் மிட்சல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் என நிறைய ‘ஆல்-ரவுண்டர்கள்’ இருப்பது பலம். அனுபவ வில்லியம்சன், கான்வே, லதாம் ரன் மழை பொழியலாம். பந்துவீச்சில் ரூர்க்கே, மாட் ஹென்றி, சான்ட்னர் மிரட்டலாம்.
சமீபத்திய முத்தரப்பு தொடரின் பைனலில் சந்தித்த தோல்விக்கு பதிலடி தர பாகிஸ்தான் காத்திருக்கிறது. மறுபக்கம் நியூசிலாந்து வெற்றிநடையை தொடர விரும்புவதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
இரு அணிகளும் 118 ஒருநாள் போட்டியில் மோதின. பாகிஸ்தான் 61, நியூசிலாந்து 53ல் வென்றன. 3 போட்டிக்கு முடிவு இல்லை. ஒரு போட்டி ‘டை’ ஆனது. சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் 3 முறை மோதின. பாகிஸ்தான் 2, நியூசிலாந்து 1ல் வென்றன.
இன்றயை துவக்க போட்டிக்கு முன், கராச்சி மைதானத்திற்கு மேலே பாகிஸ்தானின் போர் விமானங்கள் சாகசம் நிகழ்த்த உள்ளன. இதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.