மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் விற்பனை செய்யும் கும்பல்!

மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் விற்பனை செய்யப்படும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் ஜன. 13 முதல் இதுவரை 55 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் என நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் புனித நீராடி வருகின்றனர்.

இதனிடையே, கும்பமேளாவுக்குச் செல்ல பலநூறு கிலோ மீட்டர்கள் ரயில்களிலும் பேருந்துகளிலும் நெரிசலில் சிக்கி, பல கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று, கடல் போல் காட்சியளிக்கும் மக்கள் அலையில் சமானியர்கள் புனித நீராடுகின்றனர்.

இத்தகைய சூழலில், திரிவேணி சங்கமத்தில் பெண்கள் நீராடுவதை விடியோவாக பதிவிட்டு ஆயிரக்கணக்கில் சமூக ஊடகங்களில் விற்கப்படும் சம்பவம் தெரியவந்துள்ளது.

பெண்கள் நீராடும் நூற்றுக்கணக்கான விடியோக்களை பதிவிடும் குழுவில் இணைய ரூ. 1,999 முதல் ரூ. 3,000 வரை கட்டணமாகவும் பெற்று வருகிறார்கள்.

பெண்களுக்கே தெரியாமல் அவர்கள் நீராடுவதையும் உடை மாற்றுவதையும் விடியோவாக பதிவிட்டு விற்பனை செய்து வரும் கும்பல் குறித்து உத்தரப் பிரதேச காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை.

டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லட்சக்கணக்கானோர் பெண்களின் விடியோக்களை விற்கும் குழுக்களைப் பற்றி தேடியுள்ளனர்.

இதுமட்டுமின்றி, மருத்துவமனைகளில் பெண் நோயாளிகளுக்கு மருத்துவர்களும் செவிலியர்களும் சிகிச்சை அளிக்கும் சிசிடிவி காட்சிகள், பியூட்டி பார்லர்களின் சிசிடிவி காட்சிகள் போன்றவற்றையும் விற்பனை செய்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மகா கும்பமேளா முடிவடைய இன்னும் ஒரு வார காலம் இருக்கும் நிலையில், புனித நீராடுவதற்குகூட தயங்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதுடன் சமூக ஊடகங்களில் இருக்கும் விடியோக்களை நீக்கவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.