தாய் மரணம் குறித்து 4 வயது மகள் வரைந்த ஓவியத்தைப் பார்த்து அதிர்ந்த காவல்துறை!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்ஸி மாவட்டம் கோட்வாலி பகுதியில், 27 வயது பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தில், அவரது மகள் வரைந்த ஓவியம், காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அப்பெண் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தாயை, தந்தை அடித்துத் துன்புறுத்துவது போலவும், அவரைக் கொலை செய்வது போலவும் மகள் வரைந்த ஓவியத்தைப் பார்த்த, பெண்ணின் பெற்றோர், அந்த ஓவியத்தை காவல்துறையினரிடம் அளித்துள்ளனர்.
உடனடியாக சிறுமியிடம் காவல்துறையினர் விசாரித்ததில், அப்பாதான், அம்மாவை அடித்துக் கொன்றார், நீ செத்துவிடு என்று கூறினார், அம்மா அசைவற்றுக் கிடந்தார். பிறகு, அம்மா உடலை அப்பா தொங்க விட்டார் என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
ஏன் இதனை முன்பே சொல்லவில்லை என்று காவல்துறையினர் கேட்டதற்கு, தன்னையும் அப்பா கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாக சிறுமி கூறியிருக்கிறார்.
இதையடுத்து, கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் உடல் கூறாய்வு அறிக்கைக்காக காவல்துறையினர் காத்திருக்கிறார்கள்.
இது பற்றி பெண்ணின் தந்தை கூறுகையில், 2019ஆம் ஆண்டு முதலே வரதட்சிணை கேட்டு மகளை துன்புறுத்தி வந்ததாகவும், திருமணத்தின்போது ரூ.20 லட்சம் கொடுத்தும் கூட, கார் கேட்டு துன்புறுத்திய நிலையில்தான் மகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.