வித்யா கொலை வழக்கின் முன்னாள் டிஐஜிக்கு கடுங்காவல் தண்டனை…

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்யா மாணவி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை முதலில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம். மிஹால் இன்று (20) 4 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார்.

இதற்கு மேலதிகமாக லலித் ஜெயசிங்கவுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, செலுத்த தவறினால் மேலும் 6 மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கவும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கு மேலதிகமாக சிறீகஜன் என்ற பொலிஸ் அதிகாரிக்கும் 4 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, அவர் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதால் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கவும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா 2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார், மேலும் கொலை குற்றச்சாட்டில் குற்றவாளிகள் ஏழு பேருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் ஏற்கனவே மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமார் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், அவருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.