நீதிமன்றத்தை அதிரவைத்த சதி – யார் செவ்வந்தி? யார் முகமது அஸ்மான் செரிஃப்டீன்?

புதுக்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 05வது நீதிமன்ற அறையில் நடந்த சஞ்சீவ கொலை வழக்கு நீதிமன்றத்தையும், மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முக்கிய சந்தேக நபரான சமிந்து கைது செய்யப்பட்டதுடன், தொடர்ந்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கொலையின் சூழ்ச்சி:

முடிவெடுக்கப்பட்ட நாட்களில், வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்ட கொலையாளி முதலில் முகமது அஸ்மான் செரிஃப்டீன் (34) என அடையாளம் காணப்பட்டார். ஆனால் பின்னர், அது போலி பெயர் என்பதும்,
மஹரகம தம்பஹேன வீதியில் வசிக்கும் சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி என்பதே சரியான பெயர் என்பதும் தெரியவந்தது.

செவ்வந்தி புத்தகத்தை சட்ட அறையில் வைத்துவிட்டு நகர்ந்தார் – சமிந்து புத்தகத்தை எடுத்து கொண்டு விசாரணை கூண்டுக்கு அருகில் சென்றார். சஞ்சிவை சுட்டதும் , நீதிமன்றத்துக்குள் இருந்த அனைவரும் கலைந்து ஓடினர். சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கொலையாளி , துப்பாக்கியை அதே இடத்தில் போட்டு விட்டு , சன நெரிசலோடு “அதோ கணேமுல்ல சஞ்சீவ் தப்பித்து ஓடுகிறான். சுடுகிறார்கள். சுடுகிறார்கள்” என கத்திக் கொண்டு தப்பிச் சென்றான் …….

புதுக்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 05வது நீதிமன்ற அறையில் நடந்த சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான சமிந்து கைது செய்யப்பட்ட பின்னர் , விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்ட கொலையாளி முதலில் முகமது அஸ்மான் செரிஃப்டீன் (34) என அடையாளம் காணப்பட்டார், ஆனால் அது அவரது போலி புனைப் பெயர் என்றும் , பின்னர் மஹரகம தம்பஹேன வீதியில் வசிக்கும் அவரது உண்மையான பெயர் சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி என்றும் அடையாளம் காணப்பட்டார்.

கொலை நடந்த பின் வெளியேறும் காட்சி …

நீதிமன்றத்தில் கொலை நடந்த சில நிமிடங்களில் அவர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறி அவருக்காக காத்திருந்த வேனில் ஏறி சென்றிருக்கிறார். சமிந்துவுக்கு பின்னால் அவருக்கு உதவிய பெண்னான செவ்வந்தி தொடர்ந்து அதே வழியாக வந்து , அவரோடு நீர்கொழும்பு வரை சமிந்துவுடன் பிரயாணம் செய்து இறங்கியுள்ளார். அதன் பின் அவர் எங்கு சென்றார் அல்லது எப்படி மாயமானார் என இதுவரை தெளிவில்லை.

தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னிருந்தே சமிந்துவும் , செவ்வந்தியும் ஒன்றாக திரிந்து , ஒன்றாக விடுதியொன்றில் தங்கி , புதுக்கடை  நீதிமன்ற வளாகத்துக்கு பொது மக்கள் போல சென்று வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அவர் கொழும்பிலிருந்து புத்தளம் வரை வேனில் வேகமாக சென்றுகொண்டிருந்த போது பொலிஸார் நடத்திய நடவடிக்கையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவர் கல்பிட்டிய பகுதி ஊடாக படகில் நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற நிலையில் , புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவருடன் வேன் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.

கொலையை நடத்தியவர்களே அவரைக் காட்டிக்கொடுத்ததாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

பொலிஸ் விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, சந்தேக நபர் கொமாண்டோ லெப்டினன் தர முன்னாள் இராணுவ வீரர் மற்றும் புலனாய்வுத் துறையுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என தெரியவருகிறது.

சஞ்சீவ கொலை 150 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சந்தேக நபருக்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே முற்பணமாக கிடைத்துள்ளது. துபாயில் தங்கியிருக்கும் சக்திவாய்ந்த பாதாள உலகத் தலைவரான கெஹெல்பத்தர பத்மேயின் நெருங்கிய நபர் மூலம் இந்த கொலை ஒப்பந்தம் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

கெஹெல்பத்தர பத்மேயின் தந்தை நிஹாலின் நெருங்கிய பாதாள உலகத் தலைவரான ஒஸ்மண்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் பின்னர் நிஹாலை சுட்டுக் கொன்றது கணேமுல்ல சஞ்சீவ என்பதால் , அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தந்தையை கொன்ற சஞ்சீவவை கொன்று பழி தீர்த்த பத்மே!
“எனக்கு எப்போதுமே பாதாள உலகத்தில் இணைய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. அதேபோல் நான் போதைப்பொருள் விற்றதில்லை. கப்பம் வாங்கியதில்லை. கூலிக்கு கொலை செய்ததில்லை. அவற்றை செய்யவுமில்லை. நான் என் வேலையை பார்த்துக்கொண்டு என்னால் முடிந்தவரை மக்களுக்கு உதவி செய்து வாழ்ந்தவன். கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அது தெரியும். ஆனால் என் அப்பா ஒரு பாதாள உலக கும்பலால் காரணமின்றி கொல்லப்படுகிறார். அந்த சம்பவத்தில்தான் நான் பாதாள உலகத்தில் இணைகிறேன். அது கப்பம் வாங்கவோ, கூலிக்கு கொலை செய்யவோ, போதைப்பொருள் விற்கவோ அல்ல. என் அப்பாவை கொன்றவர்களிடம் பழிவாங்க. உண்மையில் நான் பாதாள உலகத்தில் இணைந்தது அந்த காரணத்திற்காகத்தான்.”
– கெஹெல்பத்தார பத்மே

சமிந்து தில்ஷான் ஒரு கூலி கொலையாளி என பொலிஸார் கூறுகின்றனர்.

ஐஸ் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையான சந்தேக நபர், போதைப்பொருள் வாங்க பணம் தேடுவதற்காக ஒப்பந்த கொலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் கல்கீசை வட்டரப்பல சாலையில் நடந்த கொலை உட்பட ஐந்து முதல் ஏழு கொலைகள் வரை அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பர் 28ஆம் திகதி சீதுவ லியனகெமுல்லவில் ஒரு வணிகக் குடும்பத்தின் தந்தை மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் நடந்த கொலை தொடர்பான மற்றொரு முக்கிய நபர் வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்ட பெண். நீர்கொழும்பு கட்டுவெல்லேகம சாலையில் வசிக்கும் பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற பெண் போதைப்பொருள் கடத்தல் செய்பவர் என தெரியவந்துள்ளது. அவர் வெள்ளை மற்றும் கறுப்பு சேலை அணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்துள்ளார்.

செவ்வந்தியின்  தாயும் , சகோதரரும் விசாரணைக்காக கைதாகியுள்ளனர். அவர்கள் செவ்வந்தி கடந்த 3 மாதங்களாக வீட்டுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு கேமரா பதிவுகளில் பெண் சந்தேக நபர் முதலில் நீதிமன்றத்திற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. அவர் தண்டனைச் சட்டத்தின் புத்தகத்துக்குள் 0.38 காலிபர் ரிவோல்வரை மறைத்து எடுத்து வந்துள்ளார். அவர் பல கோப்புகளுடன் வந்துள்ளார், மேலும் துப்பாக்கி வைத்திருந்த புத்தகத்தை வழக்கறிஞர்கள் தங்கியிருக்கும் அறையில் வைத்துவிட்டு, பின்னர் வரும் சமிந்து அதை எடுக்கும் வகையில் அங்கிருந்து வெளியேறியிருகிறார்.

பின்னர் வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்ட துப்பாக்கி ஏந்திய சமிந்து ஒரு கடித உறையை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு நீதிமன்றத்திற்குள் நுழைந்துள்ளார். பெண் சந்தேக நபர், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சமிந்து, பின்னர் ரிவோல்வரை சாட்சிக் கூண்டுக்கு அருகில் வீசிவிட்டு,

“இதோ கணேமுல்ல சஞ்சீவ் தப்பித்து ஓடுகிறான். சுடுகிறார்கள். சுடுகிறார்கள்” என்று கத்திக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த கொலை கெஹெல்பத்தர பத்மே உட்பட பல பாதாள உலகத் தலைவர்களால் திட்டமிடப்பட்டது என பொலிஸ் புலனாய்வுத் துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கமாண்டோ சமிந்துவுடன், பட்டுவத்தை சாமர, ஜா-எல ஜூட் மற்றும் கெசல்வத்தை தினுக்க ஆகியோர் இந்த திட்டத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொகுஹெட்டி வழிகாட்டுதலின் கீழ் முக்கிய விசாரணை நடைபெறுகிறது. எதிர்காலத்தில் விசாரணை குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்படும்.

பொதுவாக ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சஞ்சீவ, அன்று ஒரு சிறப்பு காரணத்திற்காக பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையின் 12 அதிகாரிகளது பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அன்று அவருக்கு மூன்று வழக்குகள் விசாரணைக்கு வர இருந்தன. அவர் பூஸ்ஸாவிலிருந்து அழைத்து வரப்பட்டதிலிருந்து கொலையாளிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக உதவி இருந்த பெண் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுவது குறித்து நேற்று மதியம் அறிவிக்கப்பட்டது.

பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற இந்த பெண் 25 வயது உடையவர் மற்றும் 995892480v என்ற தேசிய அடையாள அட்டை எண்ணைக் கொண்டுள்ளார், அவர் எண் 243/01 நீர்கொழும்பு வீதி, ஜெய மாவத்தை, கட்டுவெல்லேகம பகுதியில் வசிப்பவராகும்.

இவர் ஏற்கனவே போதை பொருள் வழக்கு ஒன்றில் சிறையில் இருந்து விடுதலையானவர் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண் சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், பின்வரும் எண்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் – 071-859 1 727
கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறை நிலையப் பொறுப்பதிகாரி – 071 859 1 735

தகவல் வழங்குபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும், வெற்றிகரமான தகவல்களை வழங்குபவருக்கு பொலிஸ் பரிசு நிதியிலிருந்து பரிசு வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

செவ்வந்தியை தேடி போலீசார் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

– ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.