இந்திய அணி முதல் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. முதல் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. சதம் விளாசிய சுப்மன் கில், வெற்றிக்கு கைகொடுத்தார்.
ஐ.சி.சி., சார்பில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்கான இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடக்கின்றன. ‘ஏ’ பிரிவில் உள்ள இந்திய அணி, நேற்று வங்கதேசத்தை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
வங்கதேச அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் சவுமியா சர்கார், ‘டக்’ அவுட்டானார். கேப்டன் நஜ்முல் ஷான்டோ ‘டக்’ அவுட்டாகினார். மெஹிதி ஹசனையும் (5), ஷமி வெளியேற்றினார். அக்சர் படேல் வீசிய 9வது ஓவரின், 2, 3வது பந்தில் தன்ஜித் ஹசன் (25), அனுபவ முஷ்பிகுர் (0) வெளியேற, வங்கதேச அணி 35/5 என திணறியது.
பின் தவ்ஹித், ஜாக்கர் அலி இணைந்து அணியை மீட்டனர். 6வது விக்கெட்டுக்கு 154 ரன் சேர்த்த போது, ஷமி பந்தில் ஜாக்கர் அலி (68) வெளியேறினார். ரிஷாத் (18) நிலைக்கவில்லை. தொடை பின்பகுதி காயத்தை பொருட்படுத்தாமல் ஆடிய தவ்ஹித் (100), ஒருநாள் அரங்கில் தனது முதல் சதம் அடித்து அவுட்டானார். வங்கதேச அணி 49.4 ஓவரில் 228 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஷமி 5 விக்கெட் சாய்த்தார்.
எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ரோகித் 41 ரன்னில் அவுட்டானார். இந்திய அணி 10 ஓவரில் 69/1 ரன் எடுத்தது.
பின் சுப்மனுடன் இணைந்தார் கோலி. இருவரும் ஒன்றும் இரண்டுமாக ரன் சேர்க்க, இந்திய அணியின் ரன் வேகம் குறைந்தது. தான் சந்தித்த 35வது பந்தில் முதல் பவுண்டரி அடித்தார் கோலி (22), ரிஷாத் சுழலில் சிக்கினார். பொறுப்பாக ஆடிய ‘பிரின்ஸ்’ சுப்மன் சதம் எட்டினார்.
கடைசியில் ராகுல் ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 46.3 ஓவரில் 231/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுப்மன் (101), ராகுல் (41) அவுட்டாகாமல் இருந்தனர்.