டெல்லி முதல்வராகப் பதவியேற்றார் ரேகா குப்தா.

டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக ரேகா குப்தா, 50, வியாழக்கிழமை (பிப்ரவரி 20) பதவியேற்றுக்கொண்டார்.

டெல்லியில் இம்மாதம் 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் 8ஆம் தேதி எண்ணப்பட்டன.

அதில் 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி, டெல்லியில் ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், டெல்லி முதல்வரைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தோற்கடித்த பர்வேஷ் வர்மா, வீரேந்திர சச்தேவா, ரேகா குப்தா, விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாயா, அஜய் மகாவர் ஆகியோரது பெயர்கள் முதல்வர் பதவிக்கு அடிபட்டன.

அதேநேரம், டெல்லிக்குப் பெண் ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரை முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டது. அதன்படி, டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ரேகா குப்தா முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, டெல்லி ராம் லீலா மைதானத்தில் வியாழக்கிழமை பதவியேற்பு விழா நடைபெற்றது. முதல்வர் ரேகா குப்தாவிற்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் ஆறு அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் 21 மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பங்கேற்க ஆட்டோ ஓட்டுநர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு பாஜக மேலிடம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. திரை நட்சத்திரங்கள் ஏறக்குறைய 50 பேர் கலந்துகொண்டனர்.

பஞ்சாப், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், பல முக்கிய விவசாயத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருநந்து.

ஹரியானாவின் ஜுலானா பகுதியில் 1974ல் பிறந்த ரேகா குப்தா, டெல்லி மாநகராட்சி தேர்தலில் 2007, 2012ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இம்முறை, டெல்லி ஷாலிமார் பாக் தொகுதியில் போட்டியிட்ட அவர், 29,205 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பந்தனா குமாரியைத் தோற்கடித்தார்.

நாட்டில் பெண் முதலமைச்சர்கள் ஆளும் மாநிலங்கள் என்பது மிகக்குறைவு. இன்னும் சொல்லப் போனால், மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜியைத் தவிர வேறு யாரும் இல்லை. பாஜகவிற்குச் சவால் விட்டபோதெல்லாம், “உங்களால் ஒரு பெண் தலைவரை அதிகாரமிக்க நாற்காலியில் அமர வைக்க முடியுமா?” என்று மம்தா பலமுறை கேட்டிருக்கிறார்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும் ஒட்டுமொத்தமாக பாஜக மீதான நிலைப்பாட்டை மாற்றி எழுதி, அடுத்து வரும் தேர்தல்களில் பெண்களின் வாக்குகளைக் கவரும் வகையிலும் ரேகா குப்தாவைத் தேர்வுசெய்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

டெல்லியின் 9வது முதல்வர் என்ற பெருமையோடு, அதன் 4வது பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெறுகிறார் ரேகா குப்தா. ஏற்கெனவே டெல்லி முதல்வர்களாக சுஷ்மா சுவராஜ், ஷீலா தீக்சித், அதிஷி மர்லேனா சிங் ஆகியோர் இருந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.