சஞ்சீவவை கொலை செய்த துப்பாக்கிதாரியின் வாக்குமூலம்.

பாதாள உலக கும்பல் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது கணேமுல்ல சஞ்சீவவை ஒன்றரை கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், கொலை செய்வதற்கு முன், துப்பாக்கிதாரி சில நாட்கள் புதுக்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வந்து முன் தயாரிப்பு செய்துள்ளார் என்பதும் விசாரணையில் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
துப்பாக்கிதாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க ஆகிய குற்றக் கும்பல் உறுப்பினர்களின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவவை கொன்றதாக அவர் கூறியுள்ளார்.
ஒன்றரை கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் கொலை செய்ததாகவும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை 2 லட்சம் ரூபாய் வீதம் சம்பளமாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கொடுத்ததாகவும் விசாரணை அதிகாரிகளிடம் துப்பாக்கிதாரி கூறியுள்ளார்.
நீதிமன்ற வளாகத்திற்குள் உதவிய பெண் தனக்கு துப்பாக்கியை கொடுத்தவுடன் அதை இடுப்பில் மறைத்து வைத்து சுட்டதாகவும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பெண்ணை தனக்கு முன்பே தெரியும் என்றும், அதன்படி அவளுடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணை அதிகாரிகளிடம் சந்தேக நபர் மேலும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாவது, துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, தான் ஒரு அப் மூலம் வாடகை காரை வரவழைத்து நீதிமன்றத்திற்கு அருகில் இருந்து நீர்கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு இடத்திற்கு சென்றதாக கூறியுள்ளார்.
தன்னை அழைத்துச் செல்ல ஒரு கார் இருப்பதாகக் கூறியதாகவும், ஆனால் அது அந்த இடத்தில் இல்லாததால் அப்படி செய்ததாகவும் துப்பாக்கிதாரி கூறியுள்ளார்.
பின்னர் தான் துப்பாக்கியை கொண்டு வந்த பெண்ணுடன் கடைக்கு சென்று புது ஆடைகள் வாங்கியதாகவும் , பின்னர் நீர்கொழும்புவுக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து வாடகைக்கு எடுத்த வேனில் கல்பிட்டி சென்று இந்தியாவுக்கு தப்பிக்க தயாராக இருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு போலி அடையாள அட்டைகள் அனைத்தையும் அவிஷ்க செய்து கொடுத்ததாக துப்பாக்கி ஏந்தியவர் தெரிவித்துள்ளார்.
கல்கிசை, வட்டரப்பல பகுதியில் நடந்த இரட்டைக் கொலையை தான் செய்ததாகவும் அவர் இங்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணேமுல்ல சஞ்சீவ நேற்று முன்தினம் (19) காலை புதுக்கடை 05வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் சாட்சிக் கூண்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவருக்கு எதிராக நிலுவையில் இருந்த மூன்று வழக்குகளில் ஆஜர்படுத்த பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறையில் இருந்து சிறப்பு பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட போதே இந்த சம்பவம் நடந்தது.
சிறப்பு வகை குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் வழக்கு விசாரணை புதுக்கடை 5வது நீதிமன்றத்தில் நடந்தபோது, அங்கு இருந்த மற்றவர்கள் வெளியேற்றப்பட்டு கதவுகள் மூடப்பட்டன.
அந்த நேரத்தில், வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்டு இருந்த துப்பாக்கி ஏந்தியவர் சாட்சிக் கூண்டு அருகே வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, துப்பாக்கியை தரையில் போட்டுவிட்டு பூட்டப்பட்ட கதவுகளை திறந்து வெளியே ஓடியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
அந்த நேரத்தில், கணேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்புக்காக வந்த பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் கதவுக்கு அருகில் இருந்தபோது, ”அங்கே உள்ளே சுடுகிறார்கள்” என்று துப்பாக்கி ஏந்தியவர் ஓடியதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி ஏந்தியவர் குறித்து தொடங்கிய விசாரணையின்படி, புத்தளம் மற்றும் கோனஹேன பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, அவர் ஒரு வேனில் புத்தளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
அங்கு வெள்ளை நிற வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளில் இருந்த நபரைப் போன்ற ஒருவரை விசாரணை அதிகாரிகள் விசாரித்துள்ளனர், மேலும் அவர் சம்பந்தப்பட்ட துப்பாக்கிதாரி என்று கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி மஹரகம, தம்பஹேன சாலையைச் சேர்ந்த 27 வயதான சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி.
அவரது பயணப் பையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டு ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அவர் பயணித்த வேனின் ஓட்டுனர் கொடெல்லஹேன, மில்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதான மகேஷ் சம்பத் பிரியதர்ஷன அல்லது பபா.
அதன்படி, துப்பாக்கி ஏந்தியவரை ஏற்றிச் சென்ற அந்த நபரும் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் துப்பாக்கிதாரி அணிந்திருந்த வழக்கறிஞர் உடை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த உடைகள் இருந்த பையை கொச்சிக்கடை , ரிதிவெல்ல சாலையில் வீசிச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி, அவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.