கொட்டாஞ்சேனை கொலை சந்தேக நபர்கள் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலி.. (Update)

நேற்று இரவு கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த தோட்டாக்களைக் காட்ட காக்கை தீவு பகுதிக்குச் சென்றபோது, பொலிஸ் அதிகாரி ஒருவரின் கையிலிருந்த துப்பாக்கியை பறித்து பொலிஸார் மீது சுட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதில் பலத்த காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு பொலிஸார் நடத்திய பதிலடி தாக்குதலில் இரண்டு சந்தேக நபர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இறந்த சந்தேக நபர்கள் 32 – 35 வயதுக்குட்பட்டவர்கள்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தப்பிச் செல்லும்போது அவர்கள் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க பின்வருமாறு விளக்கினார்.
“நேற்று (21) இரவு 9 மணியளவில் கொட்டஹேன வீதியில் உள்ள ஒரு கைபேசி கடையில் 38 வயதான சஷி குமார் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றபோது பொலிஸாரால் விரட்டிச் சென்று கைது செய்யப்பட்டனர். இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், நேற்று இரவு சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த மற்ற ஆயுதங்கள் குறித்து பொலிஸாரிடம் கூறியதை அடுத்து, சந்தேக நபர்கள் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிகளை பறித்து பொலிஸ் அதிகாரிகள் மீது சுட முயன்றனர். பொலிஸ் அதிகாரிகள் தற்காப்புக்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்தார். அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.” என்றார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்