தெலங்கானாவில் குடிநீர் திட்ட சுரங்கம் தோண்டும் பணியில் கூரை சரிந்து விபத்து : சிக்கிகொண்ட 8 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

ஹைதராபாத்: தெலங்கானாவில் குடிநீர் திட்ட சுரங்கம் தோண்டும் பணியில் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தெலங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்துக்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இது ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் (எஸ்எல்பிசி) என அழைக்கப்படுகிறது. இப்பணியில் 42 கி.மீ. தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்கம் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் நாகர் கர்னூல் மாவட்டம், தோமலபெண்டா 14-வது கி.மீ. அருகே சுரங்கப் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று காலையில் முதல் ஷிப்ட்டில் பணியாற்றும் 50 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சென்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து 3 மீட்டர் வரை சுரங்கத்தினுள் மண் விழுந்தது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். 8 பேரின் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்தார். மேலும் மீட்புப் பணியை உடனே மேற்கொள்ள நாகர்கர்னூல் மாவட்ட ஆட்சியர், தீயணைப்பு படை, காவல்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் உத்தம்குமார் ரெட்டி, ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் ஆகியோர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.

இது தொடர்பாக இரு அமைச்சர்களும் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: காலை 8 மணிக்கு 50 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சென்றுள்ளனர். 8.30 மணிக்கு போரிங் இயந்திரத்தை (டிபிஎம்) இயக்கினர். அப்போது ஒருபுறம் தண்ணீர் வெளியேறி மண்சரிவு ஏற்பட்டது. அப்போது அதிக சத்தமும் ஏற்பட்டுள்ளது. டிபிஎம் ஆபரேட்டர் விபத்தை முன்கூட்டியே உணர்ந்து உடனடியாக 42 தொழிலாளர்களை வெளியே அனுப்பினார். எனினும் போரிங் மெஷினுக்கு முன் இருந்த 8 பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர். அவர்களை உயிருடன் மீட்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் ஏற்கெனவே நடந்தபோது, அதில் மீட்பு பணியில் ஈடுபட்ட நிபுணர் குழுவுடனும் நாங்கள் பேசி வருகிறோம். சுரங்கத்தில் சிக்கியவர்களில் புராஜக்ட் இன்ஜினீயர், ஃபீல்ட் இன்ஜினீயர், 2போர்வல் ஆபரேட்டர்களும் உள்ளனர். சுரங்கத்தில் காற்று, வெளிச்சத்திற்கு குறை இல்லை. என்றாலும் இவர்களை வெளியே கொண்டு வருவது பெரும் சவாலாக மாறி உள்ளது. இவ்வாறு அமைச்சர்கள் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.