பிரதமர் மோடியின் முதன்மை செயலராக சக்திகாந்த தாஸ் நியமனம்

புதுடெல்லி: பிரதமரின் முதன்மை செயலராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராக கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்ட சக்திகாந்த தாஸ், அப்பதவியில் இருந்து கடந்த 2024 டிசம்பர் 10-ம் தேதி ஓய்வு பெற்றார். இந்த சூழலில் பிரதமரின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் பதவிக்காலம் அல்லது மறு உத்தரவு வரும் வரை இவர் அப்பதவியில் நீடிப்பார்.
பிரதமரின் முதன்மை செயலராக பி.கே. மிஸ்ரா பணியாற்றி வருகிறார். தற்போது 2-வது முதன்மை செயலராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அமைச்சரவை நியமன குழுவின் செயலர் மணிஷா சக்சேனா பிறப்பித்துள்ளார்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் கடந்த 1957 பிப்ரவரி 26-ம் தேதி சக்திகாந்த தாஸ் பிறந்தார். கடந்த 1980-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்று. தமிழக அரசுப் பணியில் இணைந்தார். காஞ்சிபுரம், திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்ட ஆட்சியராகவும், பல்வேறு துறைகளின் செயலராகவும் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசு பணிக்கு சென்று, உரம், வருவாய், பொருளாதார விவகாரம், நிதி ஆணையம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றினார்.
பிரிக்ஸ், சர்வதேச செலாவணி நிதியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, புதிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, சார்க் கூட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் பிரதிநிதியாக பணியாற்றினார்.
மத்திய அரசின் 8 பட்ஜெட்களை தயாரித்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது சூழ்நிலைக்கு ஏற்ப ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றங்களை செய்தார். பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய தருணங்களில் வட்டி விகிதத்தை குறைத்தார். அதேநேரம், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினார். யெஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி திவாலாவதை தடுத்து மீட்டெடுத்தார்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் உலகமே கடும் பொருளாதார நெருக்கடி சிக்கிய நிலையிலும், இந்தியாவின் பொருளாதாரம் ஸ்திரமாக இருப்பதை உறுதி செய்தார். ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர் காலங்களிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக இருக்க, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்தார்.
அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் என்ற வணிக இதழ் சார்பில் உலகின் தலைசிறந்த வங்கியாளர் விருதை கடந்த 2023, 2024 என 2 முறை பெற்றவர் சக்திகாந்த தாஸ். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ரூபாய் மதிப்பை உயரச் செய்தது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தியது ஆகியவற்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது