சஞ்சீவ கொலை: 8 பேர் கைது – பிரதான குற்றவாளியின் காதலி விடுவிப்பு, செவ்வந்தி மாயம்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்தேக நபர்களில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் இரண்டு முன்னாள் கமாண்டோ வீரர்களும் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கண் கண்ட சாட்சிகள்.. சொல்வதென்ன?

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்னவென்றால்,
கணேமுல்ல சஞ்சீவ சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டபோது, ​​மற்ற அனைவரும் நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றப்பட்டு நீதிமன்ற அறை மூடப்பட்டது.

பின்னர், வழக்கில் சஞ்சீவவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞரின் ஜூனியர் வழக்கறிஞர் போல் நடித்த சமிந்து, சாட்சிக் கூண்டில் இருந்த சஞ்சீவவிடம் நெருங்கி, தான் ஜூனியர் என்றும், தான் என்ன சொல்ல வேண்டும் என்று சஞ்சீவவிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது சஞ்சீவ கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டிருந்தார். சஞ்சீவ,  வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்ட துப்பாக்கிதாரியை நெருங்கியதும், துப்பாக்கிதாரி சஞ்சீவவின் மார்பை குறிவைத்து 6 தோட்டாக்களை சுட்டார். பின்னர் ரிவால்வரை விட்டுவிட்டு, மூடப்பட்டிருந்த அறையின் கதவுகளை திறந்து வெளியே இருந்த எஸ்டிஎஃப் வீரர்களிடம் ‘அங்கே உள்ளே சுடுகிறார்கள்’ என்று மெதுவாக கூறிவிட்டு வெளியே சென்றார்.

குற்றம் நடந்த பிறகு, வழக்கறிஞர் போல் வந்த துப்பாக்கிதாரி சமிந்து , இஷாரா செவ்வந்தி என்ற சந்தேக நபர்களை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றமை தொடர்பாக 19 மற்றும் 25 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியில் உள்ள தொலைபேசி தொடர்பு நிறுவனத்தில் பணிபுரியும் இந்த சகோதரர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டி , அந்த நிறுவனத்திலிருந்து வாடகை அடிப்படையில் பெறப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்களின்படி, துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு கமாண்டோ சலிந்து என்பவர் கடோல்கலே பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் ஏறி கொச்சிக்கடை ரிதிவெல்ல வீதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் வைத்திருந்த துணி பையை முச்சக்கர வண்டியில் இருந்து வெளியே வீசியுள்ளார்.

பின்னர் மற்றொரு முச்சக்கர வண்டியில் வந்த இஷாரா செவ்வந்தி என்ற சந்தேக நபருடன் வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளார், அங்கு துப்பாக்கிதாரி வாய்க்கால் ரயில் நிலையம் அருகிலும், இஷாரா சேவந்தி கொப்பரா சந்தி பகுதியிலும் இறங்கியுள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்து , துப்பாக்கிதாரியிடம் ஒப்படைத்த 22 வயது கம்பஹா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், துப்பாக்கிதாரி தப்பிச் செல்ல பயன்படுத்திய வேனை தன்வசம் வைத்திருந்ததற்காக அதுருகிரியா பொலிஸ் கான்ஸ்டபிள் ஹசித ரோஷன் (37) கைது செய்யப்பட்டுள்ளார்.

வேனில் இருந்து கண்டெடுக்கப்பட்ட “மிஸ்டர் ரோஷன்” என்று எழுதப்பட்ட பில்லில் இருந்த மொபைல் போன் எண்ணின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொட்டாவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிளின் கூற்றுப்படி, அந்த வேன் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான ருவிந்த என்பவரால் தனக்கு வழங்கப்பட்டது என்றும், அவரது அறிவுறுத்தலின் பேரில் அது துப்பாக்கிதாரியை ஏற்றிச் சென்ற ஓட்டுநரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

கான்ஸ்டபிளின் வீட்டை சோதனையிட்டதில், 12 போர துப்பாக்கிகளுக்கான 7 தோட்டாக்கள், எம் 16 துப்பாக்கிகளுக்கான ஒரு தோட்டா, ஐஸ் போதைப்பொருள் படிந்த மின்னணு தராசு மற்றும் அக்வா கார் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையில் தெரியவந்த தகவல்களின்படி, தற்போது தப்பியோடியுள்ள இஷாரா செவ்வந்தி என்ற சந்தேக நபர் வாட்ஸ்அப் மூலம் கொலை தொடர்பான அனைத்து நபர்களையும் இயக்கியுள்ளார்.

அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் தெஹிவளையில் உள்ள லாட்ஜ் ஒன்றையும் சோதனையிட்டதில், அவரது பாட்டி, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் கொலை மிரட்டல் இருப்பதாகக் கூறி நீர்கொழும்பு , ஜெய மாவத்தையில் உள்ள வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையில், துப்பாக்கிதாரியின் காதலியான கபுகெதர கிம்ஹானி தருஷிகா தேவ்மினி (23) என்ற மஹரகம, போல்வத்த பகுதியைச் சேர்ந்த பெண் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் பன்னிபிட்டிய பகுதியில் பணிபுரியும் மசாஜ் பார்லரில் இருந்து கடந்த 21ஆம் திகதி மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொலைக்குப் பிறகு, துப்பாக்கிதாரி அவளையும் அழைத்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருந்தது தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது, மேலும் சந்தேக நபர்கள் கொழும்பு கூடுதல் மாஜிஸ்திரேட் ஹர்ஷன கெகுனாவல முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 48 மணி நேர தடுப்பு உத்தரவின் பேரில் மேலும் விசாரணைக்காக தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

சமிந்துவுடன் செயல்பட்ட , செவ்வந்தியை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

Leave A Reply

Your email address will not be published.