நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம் நுஜோமா – சுவிசிலிருந்து சண் தவராஜா

ஆபிரிக்கக் கண்டத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவரான சாம் நுஜோமா மரணத்தைத் தழுவியுள்ளார். சுதந்திர நமீபிய நாட்டின் முதலாவது ஜனாதிபதியான அவர் மூன்று தடவைகள் ஜனாதிபதி பதவியை வகித்தவர் ஆவார். பெப்ரவரி 7ஆம் திகதி தனது 95ஆவது வயதில் தலைநகர் வின்ட்ஹொக்கில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணத்தைத் தழுவினார்.
நிறவெறி தென்னாபிரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நமீபிய (அன்றைய தென் மேற்கு ஆபிரிக்கா) விடுதலைக்குத் தலைமை தாங்கிய அவர் 1990 மார்ச் 21இல் நாடு சுதந்திரம் அடைந்தபோது அதன் முதலாவது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 1995 மற்றும் 2000மாம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற அவர் 2005ஆம் ஆண்டு பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
1929 மே 12இல் பத்துப் பிள்ளைகள் கொண்ட வறிய விவசாயக் குடும்பம் ஒன்றில் தலைமகனாகப் பிறந்த நுஜோமாவின் தாயார் ஒரு இளவரசி ஆவார். அரச குடும்பத்தில் பிறந்த அவரால் 6ஆம் வகுப்பு வரையே கல்வி கற்க முடிந்தது. அன்றைய காலகட்டத்தில் கறுப்பினக் குழந்தைகள் அதற்கு மேல் கல்வி கற்க நிறவெறிச் சட்டம் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள ஏனைய சகோதர ககோதரிகளைப் பராமரிப்பதே அவரின் இளமைக் கால வேலையாக இருந்தது. 17 வயதில் வேறு நகரம் ஒன்றுக்குச் சென்று தனது மாமியாருடன் வசித்த வேளையில் பல சரக்குக் கடை ஒன்றில் தனது முதலாவது வேலையைச் செய்ய ஆரம்பித்தார். தொடர்ந்து இறந்த திமிங்கலங்களைப் பதனிடும் வேலையைத் தேடிக் கொண்டார். இங்குதான் அவருக்கு அரசியல் அறிமுகம் கிடைத்தது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஆர்ஜென்ரீனா, நோர்வே மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தந்த படைவீரர்களுடன் பழகும் வாய்ப்பை அங்கு பெற்றுக் கொண்டார்.
தனது 20ஆவது வயதில் தலைநகர் வின்ட்ஹொக் சென்ற அவர் தென் ஆபிரிக்க ரெயில்வேயில் துப்புரவுப் பணியாளராக வேலையில் அமர்ந்தார். அதேவேளை முதியோர் கல்வியில் இணைந்து ஆங்கில மொழியைக் கற்ற அவர் பணியில் இருந்த போதே தென் ஆபிரிக்கக் கல்லூரி ஒன்றில் இணைந்து தொலைக் கல்வி மூலம் இளநிலைக் கல்வியை முடித்தார்.
1950களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். இதன் மூலம் அவரது அரசியல் பார்வை விரிவடையத் தொடங்கியது. ஆபிரிக்கக் கண்டத்தின் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்றுவந்த சுதந்திரப் போராட்டங்கள் தொடர்பிலான அறிவும், அனுபவமும் அவருக்குக் கிட்டியது. அவரது தொழிற்சங்க நடவடிக்கைகளைச் சகித்துக் கொள்ளாத ரெயில்வே நிர்வாகம் 1957இல் அவரைப் பணிநீக்கம் செய்தது.
அன்றைய காலகட்டத்தில் தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் வசித்த அன்டிம்பா ரொய்வோ என்பவர் ஒவாம்போலான்ட் மக்கள் காங்கிரஸ் (OPC) என்ற பெயரிலான விடுதலை இயக்கம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். தென்னாபிரிக்காவின் நிறவெறிக் கொள்கையை எதிர்ப்பது, குறிப்பாக நமீபியாவில் நடைமுறையில் இருந்த கொத்தடிமை வேலை முறைமையை எதிர்ப்பது இந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது. 1959இல் ரொய்வோ அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்ட சாம் நுஜோமா அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். பின்னாளில் இந்த அமைப்பு ஒவாம்போலான்ட் மக்கள் இயக்கம் (OPO) எனப் பெயர் மாற்றம் பெற்றது. இதன் முதலாவது மாநாட்டில் அமைப்பின் தலைவராக சாம் நுஜோமா தெரிவானார். 1959 செப்டெம்பரில் காலனித்துவ எதிர்ப்புக் குழுக்களினால் உருவாக்கப்பட்ட குடை நிறுவனமான தென் மேற்கு ஆபிரிக்க தேசிய ஒன்றியம் (SWANU) என்ற அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுள் ஒருவரானார்.
1959 டிசம்பரில் ஓல்ட் லொக்கேசன் படுகொலை எனப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து சாம் நுஜோமா கைது செய்யப்பட்டார். (கறுப்பு இனத்தவர்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்பில் இருந்து அவர்களை அகற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 44 பேர் காயமடைந்தனர்.) எனினும் ஒரு வாரத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் நாட்டைவிட்டு வெளியேறுவது நல்லது என்ற முடிவை கட்சி எடுத்தது.
சொந்த நாட்டை விட்டு வெளியேறிய சாம் நுஜோமாவின் பயணங்கள் அவரது வாழ்வையும் புரட்சிப் பாதையையும் புடம் போட்டன.
ஆபிரிக்காவின் பல நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருந்த சுதந்திரப் போராட்டங்களின் தலைவர்களை அவரால் சந்திக்க முடிந்தது. அவர்களது அனுபவங்களை உள்வாங்கிக் கொண்ட அவர் தனது நாட்டின் விடுதலைக்கு அவற்றை உரமாக்கிக் கொண்டார். அவர்களோடு நட்பை வளர்த்துக் கொண்டு அவர்களின் உதவியோடு தனது நாட்டுக்கான விடுதலைப் போராட்டத்தை விரிவாக்கிக் கொண்டார்.
1960 ஏப்ரல் 19இல் தென் மேற்கு ஆபிரிக்க தேசிய ஒன்றியத்திலிருந்து ஒவாம்போலான்ட் மக்கள் இயக்கம் வெளியேறியது. இதனைத் தொடர்ந்து தென் மேற்கு ஆபிரிக்க மக்கள் இயக்கம் (SWAPO) என்ற பெயரிலான புதிய அமைப்பு நியூ யோர்க்கில் உருவாக்கப்பட்டது. நேரில் பிரசன்னமாகி இருக்காத போதிலும் அதன் தலைவராக சாம் நுஜோமா தெரிவு செய்யப்பட்டார். 1960 யூனில் நியூ யோர்க் சென்ற சாம் நுஜோமா ஐ.நா. மன்றத்தில் தனது நாட்டின் விடுதலை தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார். பின்னர் தன்சானியா திரும்பிய அவர் தனது அமைப்பின் தலைமையகத்தை அங்கே நிறுவிய பின்னர் சர்வதேச அடிப்படையிலான தொடர்புகளைப் பேணி வந்தார். அத்தோடு நமீபியப் போராளிகளுக்கான ஆயுதப் பயிற்சிகளையும் வழங்க ஏற்பாடு செய்தார்.
1962இல் அமைப்புக்கான ஆயுதப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. தென் மேற்கு ஆபிரிக்க விடுதலைப் படை ஏன்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் பிரிவு பின்னாளில் நமீபிய மக்கள் விடுதலைப் படை எனப் பெயர் மாற்றம் பெற்றது.
ஹேக்கில் உள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையில் சாட்சியமளித்த தென்னாபிரிக்க அரசாங்கத் தரப்பு, வெளிநாடுகளில் உள்ள நமீபியக் குடிமக்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பலாம் என்ற உறுதிமொழியை வழங்கியது. அந்த உறுதிமொழியின் நம்பகத்தன்மையைப் பரிசோதிக்கும் நோக்குடன் 1966 மார்ச் 21இல் சாம் நுஜோமா பின்னாளில் நமீபியாவின் இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஹிபிக்கேபுன்யா பொஹம்பா சகிதம் விமானத்தில் வின்ட்ஹொக் வருகை தந்தார். ஆனால் விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட இருவரும் மறுதினம் சாம்பியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
1966 ஆகஸ்ட் 26இல் தென் மேற்கு ஆபிரிக்க விடுதலைப் படைக்கு எதிரான முதலாவது தாக்குதலை தென்னாபிரிக்க இராணுவம் நடத்தியது. அன்று ஆரம்பமான நமீபிய சுதந்திரத்துக்கான ஆயுதப் போராட்டம் 25 ஆண்டுகளுக்கும் அதிக காலம் நடைபெற்றது. அதேவேளை, பல்வேறு உலக மற்றும் பிராந்திய மன்றங்களில் தனது நாட்டின் விடுதலை வேண்டிய பரப்புரைகளில் சாம் நுஜோமா இடைவிடாது ஈடுபட்டார்.
29 ஆண்டு கால தலைமறைவு வாழ்க்கையின் பின்னர் 1989 செப்டெம்பரில் அவர் நாடு திரும்பினார். ஐ.நா. சபையின் கண்காணிப்பில் நடைபெறவிருந்த நாட்டின் சுதந்திரத்துக்கான தேர்தலில் போட்டியிட நாடு திரும்பிய அவர்; நாட்டின் முதலாவது ஜனாதிபதியாக நவம்பர் மாதத்தில் அரசியலமைப்புச் சபையினால் தெரிவு செய்யப்பட்டார். 1990 மார்ச் 21ஆம் திகதி நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அப்போதைய ஐ.நா. செயலாளர் நாயகம் ஜாவியஸ் பெரஸ் டி குயெல்லர், தென்னாபிரிக்க ஜனாதிபதி பிரெடரிக் டி கிளார்க், நீண்டகால சிறையிருப்பின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா உள்ளிட்டோர் சமூகமளித்து இருந்தனர்.
உலக நாடுகளின் சுதந்திரப் போராட்ட வரலாறுகள் பல சிறந்த படிப்பினைகளை எமக்கு வழங்கியுள்ளன. உலகெங்கும் சுதந்திரம் வேண்டிப் போராடும் இயக்கங்களுக்கு மாத்திரமன்றி வரலாற்று மாணவர்களும் அறிய வேண்டிய பல அரிய தகவல்களும் அவற்றில் நிறைந்திருக்கின்றன. வட்ஸ் அப்பில் மாத்திரம் வரலாறைப் படித்து அவற்றையே உண்மை என நம்பிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை சாம் நுஜோமாவின் போராட்ட வாழ்வில் இருந்து அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் ஏராளம் இருக்கின்றன. நமீபியாவில் மாத்திரமன்றி, ஆபிரிக்கக் கண்டத்தைக் கடந்து உலகெங்கும் வாழும் சுதந்திரத்தை நேசிக்கும் முற்போக்காளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக சாம் நுஜோமா திகழ்கிறார் என்றால் அது மிகையில்லை.