வெடிச் சத்தம் கேட்டதும் நீதிபதி பெஞ்சுக்கு அடியில் ஒளிந்து கொண்டார் : விசாரணையில் வெளியான உள்ளக தகவல்கள்.

கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த கணேமுல்ல சஞ்சீவ் கொலை தொடர்பான விசாரணை (24) கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் தனுஜா லக்மாலி முன்னிலையில் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது நீதிமன்றத்தில் பணியில் இருந்த மூன்று அதிகாரிகளிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டன.
பாதாள குற்றக் கும்பலின் உறுப்பினர் என கூறப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (பிப்ரவரி 24) கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் தனுஜா லக்மாலி முன்னிலையில் இந்த விசாரணைதொடர்பான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
‘சந்தேக நபரை சிறை அறைக்குள் போடும்படி சொன்னேன்’
கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறையின் பொலிஸ் சார்ஜென்ட் பண்டாரவின் மேற்பார்வையில் சாட்சியம் அளித்த கெசெல்வத்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹேவாபதிரன தரங்க, துப்பாக்கிச் சூடு நடந்தபோது நீதிமன்ற அறையில் பணியில் இருந்தார்.
சம்பவம் நடந்த நாளில் காலை 9.30 அல்லது 9.35 மணியளவில் நீதிமன்ற விசாரணைகள் தொடங்கியதாக அவர் சாட்சியம் அளித்தார்.
“அன்று ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் சிறையில் அடைக்கப்பட்ட சந்தேக நபர்களின் ரிமாண்ட் காலத்தை நீட்டிப்பது இருந்தது.
காலை 9.40 மணியளவில் நீதிமன்ற அறையின் மூடிய கதவை திறந்து இரண்டு சிறை அதிகாரிகள் ஒரு சந்தேக நபரை திறந்த நீதிமன்றத்திற்குள் அழைத்து வந்தனர்.
ஒரு சிறை அதிகாரி என்னிடம் வந்து ‘கணேமுல்ல சஞ்சீவ’ அழைத்து வரப்பட்டுள்ளார் என கூறினார். நான் சந்தேக நபரை சிறை அறைக்குள் போடும்படி சொன்னேன். அப்போது இந்த சந்தேக நபருக்கு எதிரிகள் இருப்பதால் கூண்டில் போட முடியாது என்று சிறை அதிகாரி கூறினார். பின்னர் பெஞ்சில் உட்காரச் சொன்னேன். மாஜிஸ்திரேட் கேட்டால் நீங்களே காரணம் சொல்லுங்கள் என்றும் சிறை அதிகாரியிடம் சொன்னேன். பின்னர் இந்த சந்தேக நபர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். சுமார் முப்பது வழக்குகள் ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்பட்ட பிறகு ஸ்கைப் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பின்னர் கணேமுல்ல சஞ்சீவவின் வழக்கு விசாரணைக்கு வந்தது. சந்தேக நபர் சாட்சிக் கூண்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.”
“அந்த நேரத்தில் மாஜிஸ்திரேட் சந்தேக நபரான கணேமுல்ல சஞ்சீவிடம் வழக்கில் பிணை உள்ளதா என்று கேட்டார்.
அதற்கு கணேமுல்ல சஞ்சீவ பிணை தேவையில்லை என பதிலளித்தார்.
அந்த நேரத்தில், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இந்த சந்தேக நபரை ஏன் அழைத்து வந்தீர்கள் என மாஜிஸ்திரேட் சிறை அதிகாரியிடம் கேட்டார்.”
“அதற்கு பதிலளிக்க சிறை அதிகாரி முன் வந்து , அவரால் ‘ஒன்பது’ என்ற வார்த்தையை மட்டுமே சொல்ல முடிந்தது. திடீரென மூன்று நான்கு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. உள்ளே இருந்தவர்கள் அலற ஆரம்பித்தனர். வழக்கறிஞர் உடையில் இருந்த ஒருவர் சாட்சிக் கூண்டை நோக்கி திரும்பி ஏதோ செய்வதை பார்த்தேன். அதனுடன் தான் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.” என பொலிஸ் கான்ஸ்டபிள் கூறினார்.
“அந்த நபரின் முகத்தை நான் பார்க்கவில்லை. அவர் நீல நிற டை அணிந்திருந்தார். பின்னர் அந்த நபர் கதவைத் திறந்து வெளியே குதித்தார். கையில் எதுவும் இல்லை. பின்னர் நீதிபதி இருக்கையை பார்த்தேன். அங்கு நீதிபதி இல்லை.
பின்னர் நாங்கள் நீதிபதியை தேடிய போது, நீதிபதி பெஞ்சுக்கு அடியில் இருந்தார். பின்னர் நாங்கள் அவரை பாதுகாப்பாக அதிகாரப்பூர்வ அறைக்கு அழைத்துச் சென்றோம். நீதிபதி அதிர்ச்சியில் இருந்தார். பின்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபரான கணேமுல்ல சஞ்சீவ சாட்சிக் கூண்டில் தலைகீழாக விழுந்து கிடந்தார்.” என்று கூறினார்.
‘ஒரு வழக்கறிஞர் சுட்டார் என்று கத்தினார்கள்’
இதையடுத்து, சம்பவம் நடந்தபோது நீதிமன்ற அறையில் இருந்த வழக்கறிஞர் பிரியந்த புஷ்பகுமார சமரநாயக்க சாட்சியம் அளிக்கையில், தான் சம்பவம் நடந்த நாளில் காலை 8.30 மணியளவில் நீதிமன்ற அறைக்குள் வந்ததாக கூறினார்.
“காலை 9.30 மணியளவில் விசாரணை தொடங்கியது. அப்போது உயரமான ஒருவர் கடித உறையால் முகத்தை மூடிக்கொண்டு நீதிமன்ற அறைக்குள் வந்தார். அவரது கண்களை மட்டுமே நான் பார்த்தேன். இந்த நபர் ஒரு வழக்கறிஞர் என நான் நினைக்கவில்லை. இந்த நபர் சிஐடி அல்லது போதைப் பொருள் பிரிவு அதிகாரி என நினைத்தேன். பின்னர் கணேமுல்ல சஞ்சீவவின் வழக்கு விசாரணைக்கு வந்தது. சிறை அதிகாரிகள் சந்தேக நபரை சாட்சிக் கூண்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சந்தேக நபரிடம் ஜாமீன் உள்ளதா என்று கேட்டார். அதற்கு அவர் ஜாமீன் இல்லை என்று பதிலளித்தார்.
பின்னர் நீதிபதி , நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஏன் அழைத்து வந்தீர்கள் என சிறை அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு சிறை அதிகாரிகள் ஏதோ சொன்னார்கள். அந்த நேரத்தில் அந்த உயரமான நபர் பின்னால் இருந்து எதையோ எடுத்து சஞ்சீவ மீது குறி வைத்தார். உடனே துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஐந்து துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. பின்னர் அந்த நபர் கைத்துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு கதவைத் திறந்து வெளியே சென்றார். பின்னர் ருக்ஷன் என்ற அதிகாரி ‘ஒரு வழக்கறிஞர் சுட்டார்’ என்று கத்தினார். மக்கள் அலற ஆரம்பித்தனர். சஞ்சீவ கூண்டுக்குள் விழுந்து கிடப்பதை பார்த்தேன்” என அவர் கூறினார்.
இதையடுத்து பேலியகொட குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அனுர விஜேசிரி சாட்சியம் அளித்தார்.
கடந்த 19ஆம் தேதி காலை 9.15 மணியளவில் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் 5ஆம் எண் அறைக்குள் தான் வந்ததாக அவர் கூறினார்.
“அன்று காலை 9.30 மணியளவில் விசாரணை தொடங்கியது. அன்று ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் விசாரணை நடத்தப்பட்டதால் நீதிமன்ற அறையில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
நீதிமன்ற ஊழியர்கள், சிறை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இருந்தனர்.
காலை 9.45 மணியளவில் சிறை அதிகாரிகள் ஒரு சந்தேக நபரை நீதிமன்றத்திற்குள் அழைத்து வந்தனர். பின்னர் அவரை சிறை அறைக்கு அருகில் உள்ள ஒரு பெஞ்சில் உட்கார வைத்தனர். பின்னர் அவரது வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் ஒரு வழக்கறிஞர் போல் இருந்த ஒருவர் சாட்சிக் கூண்டில் இருந்த சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஐந்து துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. நீதிமன்றத்திற்குள் இருந்தவர்கள் ‘ஒரு வழக்கறிஞர் சுட்டார்’ என்று கத்த ஆரம்பித்தனர். பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கதவைத் திறந்து தப்பிச் சென்றார். அப்போது எஸ்டிஎஃப் அதிகாரிகள் வந்தனர். பொதுமக்கள் படிக்கட்டுகளில் விழுந்து கிடந்தனர். எஸ்டிஎஃப் அதிகாரிகள் படிக்கட்டுகளில் நிற்பதை பார்த்தேன்” என அவர் சாட்சியம் அளித்தார். பின்னர் சாட்சிக் கூண்டுக்கு அருகில் ரிவால்வர் போன்ற துப்பாக்கி கிடப்பதை பார்த்தேன்.” என சாட்சி மேலும் கூறினார்.
இதையடுத்து கூடுதல் சாட்சியம் வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.