வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்குக்கு பிச்சையா? :இராமநாதன் அர்ச்சுனாவின் கடும் விமர்சனம்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் அரசு பிச்சையிடுவதாக யாழ் மாவட்ட சுயேட்சை உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழர்கள் பிச்சை எடுக்கத் தயாராக இல்லை என்றும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கினால் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் பில்லியன் கணக்கில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர்,

“யாழ் நூலகத்திற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளீர்கள். இது மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.0076 வீதமாகும். வடக்கு வீதிகள் அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளீர்கள். இது 0.38 வீதம் என சுட்டிக் காட்டினார்.

அவர் மேலும் பேசும் போது , வடக்கு கிழக்கில் 35 ஆண்டுகள் போர் நடைபெற்றது.

ஆனால் வீடுகளை புனரமைக்க 1500 மில்லியன் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது 0.01 வீதம். வட்டுவாகல் பாலம் அமைக்க 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளீர்கள். இது 0.076 வீதம். சுகாதாரத் துறைக்கு ஒதுக்கிய மொத்த நிதியில் வடக்கிற்கு 0.66 வீதமும், கிழக்கிற்கு 0.8 வீதமும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது பிச்சையிலும் பிச்சை” என்று கடுமையாக சாடினார்.

மேலும், “சீனாவிடமும் இந்தியாவிடமும் பிச்சை எடுத்துவிட்டு அதில் எங்களுக்கு 0.01 வீதத்தை பிச்சை போடுகிறீர்கள்.

யாழ்ப்பாணத்தில் இண்டஸ்ரியல் பார்க் அமைக்க 3 இடங்களைத் தேர்வு செய்துள்ளீர்கள். ஆனால் கைத்தொழில்துறைக்கு ஒதுக்கிய மொத்த செலவீனத்தில் 1.54 வீதம் மட்டுமே ஒதுக்கியுள்ளீர்கள்.

கே.கே.எஸ்.ஸை நாங்கள் கட்டுவோம். முடிந்தால் அதை எங்களிடம் தாருங்கள். நாங்கள் உங்களுக்கு சிமெண்ட் தருகிறோம். வடக்கு கிழக்கிலிருந்து நாங்கள் உங்களுக்கு எல்லாம் தந்தோம். ஆனால் இப்போது 0.00 அளவில் பிச்சை போடுகிறீர்கள்” என்றும் அவர் கூறினார்.

“எனது தமிழ் மண் தவறாக போட்ட 3 பேருக்கான வாக்குகளினால் பத்திரிகை வாசிக்கத் தெரியாதவர்கள் வந்துள்ளார்கள்.

அனுரகுமார திசாநாயக்க எங்களுக்கு ஏதாவது செய்வார் என்று மக்கள் நம்பினார்கள். நான் சிங்களர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் இங்கு என்னை எதிரியாகவே பார்த்தார்கள். ஆளும் தரப்புக்கும் எதிர்கட்சிக்குமான சண்டையில் நாங்கள் தான் அவதிப்படுகிறோம்.

யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் அரச வாகனத்தை மோதி உடைத்துள்ளார். இந்நிலையில் அரசு அதிபர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியில் 56 மில்லியன் ரூபாயில் 35 மில்லியன் ரூபாயை எடுக்கப் போகிறாராம்.

அப்படியானால் நாங்கள் என்ன தேங்காய்களா?

அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி கூறினார்.

ஆனால் நீதி அமைச்சர் அரசியல் கைதிகள் இல்லை என்கிறார்.

எமது தீவகத்தில் குடிப்பதற்கு நீரின்றி மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தெற்கிற்கு 61234 மில்லியன் ரூபாயை நீர் வழங்கலுக்கு ஒதுக்கியுள்ளீர்கள்.

தலதா குண்டு வைத்த ரோஹன விஜேவீர பயங்கரவாதியல்ல. பிரபாகரன் பயங்கரவாதி. இதுதான் உங்கள் சிந்தனை. ஏனெனில் நாங்கள் தமிழர்கள். நீங்கள் சிங்களவர்கள்?

கிளீன் ஸ்ரீலங்கா செயலணியில் ஒரு தமிழன், முஸ்லிம் இருக்கிறார்களா? இல்லை. இதுதான் உங்கள் நல்லிணக்கம். இவற்றை சொன்னால் நாங்கள் மோசமானவர்கள். அரசாங்கத்துடன் டீல் வைத்துக் கொள்ளும் தமிழ் பிரதிநிதிகள் நல்லவர்கள் என்பார்கள்: என்னை துரோகி என்பார்கள் ” என்று அவர் கடுமையாக சாடினார்.

Leave A Reply

Your email address will not be published.